பாரதிய ஜனதா கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நிறைவு
March 28, 2022
0
தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய உள்ளாட்சி பிரதிநிதிகள் இரண்டு நாள் பயிற்சி முகாம் 26.03.2022 சனிக்கிழமை காலை 10 மணி அளவில் தொடங்கி 27.03.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி வரை பெரம்பலூர் சிறுவாச்சூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அவர்கள் தலைமை வகித்தார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ் ஜி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள். மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியம் அவர்கள் வரவேற்றார்கள்.
பாஜக தேசிய இணைப் பொருளாளர் சுதாகர் ரெட்டி அவர்கள் கூறுகையில் "தமிழக மக்கள் மத்திய அரசின் செயல்பாடுகளையும் நலத்திட்டங்களையும் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். மத்திய அரசின் நலத்திட்டங்கள் மூலம் பயனடைவதை உணர்ந்து வருகின்றனர்.
கொரோனா தொற்றை கவனத்துடன் எதிர்கொண்டது மட்டுமல்லாமல் உக்ரைன் - ரஷ்யா போரில் சாதுர்யமாக நடந்து கொண்டதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் ஆளுமை உலக அளவில் நிரூபணமாகியுள்ளது. தனது செயல்பாடுகளால் உலக தலைவராக மோடி உயர்ந்திருக்கிறார்.
'இல்லம் செல்வம் உள்ளம் வெல்வோம்' என்ற பிரச்சார இயக்கத்தின் மூலம் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை எடுத்துக் கூறுவோம். வருங்காலங்களில் தமிழக மக்களின் இதயங்களை நிச்சயம் வெல்வோம்" என கூறினார்.
இந்த நிகழ்வில் பாரதி ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் அவர்கள் கூறுகையில் "கிராமப்புற மக்களின் நலன் கருதி பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம், குடிநீர் வசதி, ரூ 5 லட்சம் மருத்துவ காப்பீட்டு திட்டங்களை மத்திய அரசு நேரடியாக வழங்கிவருகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரக்கூடிய நிதியில் 80 சதவீதம் மத்திய அரசு நிதி ஆகும்.
பாரதிய ஜனதா கட்சியின் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் லஞ்ச லாவண்யம் இல்லாமல் நேரடியாக மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க வேண்டும். அதை உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மிகச் சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த பயிற்சி வகுப்புகளை நடத்துகிறோம்" என கூறினார்.
மேலும் இந்த நிகழ்வில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள், முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா அவர்கள், மாநில துணைத் தலைவர் வி. பி. துரைசாமி அவர்கள் மற்றும் சக்கரவர்த்தி அவர்கள், மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் அவர்கள், தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அவர்கள்,மாநில துணைத் தலைவரும்
திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் அவர்கள், தேசிய பொதுக்குழு உறுப்பினரும் நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான இரண்டாம் நாள் பயிற்சி முகாம் நிகழ்வானது மாலை 5.30 மணி அளவில் இனிதே முடிவு பெற்றது.