ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தென் முகம் வெள்ளோடு சாத்தந்தை குலமக்கள் நற்பணி மன்றத்தின் தலைவர் முத்,துசாமி, செயலாளர் கண்ணுசாமி, பொருளாளர் பொன்னுசாமி ஆகியோர் தலைமையில் மன்றத்தின் நிர்வாகிகள் திரண்டு வந்து மனு அளித்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் தென்முகம் வெள்ளோடு கிராமத்தில் ராசா சுவாமி, நல்ல மங்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது.
தென் முகம் வெள்ளோடு சாத்தந்தை குலமக்கள் ஆகிய நாங்கள் ஆயிரம் குடும்பங்களை கொண்டு எங்களின் நன்கொடைகள் மட்டும் கொண்டு 3.19 சென்ட் பூமி கிரையத்திற்கு வாங்கி கோவில் கட்டப்பட்டது. இக்கோயிலில் புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்து கடந்த 7 ஆண்டுகளாக வழிபாடு செய்து வருகிறோம்.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழைய ராசா சுவாமி கோவில் நாங்கள் புதிதாக கட்டியுள்ள ராசா சுவாமி நல்ல மங்கை அம்மன் கோவிலுக்கு தென்புறம் அமைந்துள்ளது. நாங்கள் புதியதாக கட்டியுள்ள இந்த கோவிலுக்கும் அறநிலைய துறையினருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்நிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 13ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் எங்களது கோவிலில் உண்டியல் வைக்க முயற்சி செய்தார்கள். இது சட்டப்படி தவறு. உண்டியல் வைப்பது தொடர்பாக இதுவரை எங்களுக்கு எந்த ஒரு அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை. தென்முகம் வெள்ளோடு சாத்தந்தை குலம் கொங்கு வேளாளர் மக்களுக்கு மட்டுமே இந்த கோவில் மீது உரிமை உள்ளது.
இந்து சமய அறநிலைத்துறையினர் எங்கள் கோவிலில் அத்துமீறி உண்டியல் வைக்க முயற்சி செய்கிறார்கள். இதனால் எங்கள் கோவில் மற்றும் நிர்வாகிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த கோவில் தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே இந்த கோவிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் உண்டியல் வைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். என அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.
கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை தலைவர் மணி கவுண்டர், முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி, மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் கதிர்வேல் உள்பட பலர் உடனிருந்தனர்.