ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றோர் நல சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் மற்றும் தலைவர் வடிவேல்சுந்தர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கூறியதாவது:
2013ல் தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அதில் 4000 பேர் தவிர மற்றவர்களுக்கு வெவ்வேறு பணி கிடைத்துவிட்டது. தமிழக முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது தனியாக ஆசிரியர் போட்டி தேர்வு நடத்துவதற்கு பதில் நேரடி நியமனம் செய்யப்படும் என்று அறிவித்தார். திமுக தேர்தல் அறிக்கையிலும் இது குறிப்பிடப்பட்டது. ஆனாலும் அரசாணை 149 இன் கீழ் மீண்டும் ஒரு தகுதித் தேர்வு நடத்தியே ஆசிரியர் நியமனம் நடக்கிறது. 2017, 2019, 2021ல் மேலும் 11 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவ்வாறு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேரடி நியமனம் அரசு செய்ய வேண்டும். இந்தியாவில் ஆந்திரா தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் இவ்வாறு நேரடி நியமனம் செய்யப்படுகிறது. ஆனால் இங்கு மட்டும் இடையில் ஒரு போட்டி தேர்வு நடத்தப்பட்டு தான் ஆசிரியர் நியமனம் செய்யப்படுவதால் 2013ல் தேர்ச்சி அடைந்த 4000 பேர் வேலை இன்றி அவதிப்படுகின்றனர்.
இதற்கிடையே நீதிமன்றத்தை நாடிய 400 பேருக்கு மட்டும் பணியிடம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஒரு நபருக்கு வழக்கு செலவிற்கு ரூபாய் 30000 செலவாகும். எனவே பலர் நீதிமன்றத்தை அணுக வாய்ப்பில்லாமல் உள்ளது.
எங்களுக்கு ரூ10 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் பாதுகாப்போடு பணி அமர்த்தினாலும் வேலை செய்ய தயார், என்று கூறினர்.