ஒரு ரயில் நிலையத்தில் ஒரு தயாரிப்பு திட்டம் - ஈரோடு ரயில் நிலையத்தில் சென்டெக்ஸ் நிறுவனத்தின் கடை
April 13, 2022
0
“ஒரு ரயில் நிலையத்தில் ஒரு தயாரிப்பு" என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதா ராமன் அறிவித்தார்.
அதன் படி உள்ளூர் கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதுடன், அந்தந்த பகுதிகளில் தயாரிக்கப்படும் பிரபலமான பொருட்கள் அனைத்து பகுதிகளை சேர்ந்த மக்களும் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த திட்டத்தின் கீழ் சென்னிமலையில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி போர்வைகளை ஈரோடு ரயில் நிலையத்தில் விற்பனை செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர்.
ஈரோடு ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் சென்டெக்ஸ் நிறுவனத்தின் போர்வைகள் விற்பனைக்கான கடை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழாவில் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் கவுதம் சீனிவாஸ் கலந்துகொண்டு கடையை திறந்து விற்பனையை தொடங்கி வைத்தார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, ஈரோட்டில் இருந்து கோவைக்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு உள்ளன. இதேபோல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள பயணிகள் ரயில்களை இயக்குவது தொடர்பாக தலைமை நிர்வாகம் முடிவு செய்ய வேண்டும். விரைவில் பயணிகள் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்
ஈரோடு ரயில் நிலையத்தில் தற்போதைக்கு கூடுதல் நடைமேடைகள் தேவையில்லை. ரயில் என்ஜின் பெண் டிரைவர்களுக்கு கழிப்பிட வசதி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த விழாவில் சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.