ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் 2 முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான தேர்வுக் குழு கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் தலைமையில் இன்று (10.11.2025) நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 ஆகிய தேர்வுகள் 15.11.2025 மற்றும் 16.11.2025 ஆகிய 2 நாட்களில் நடைபெறவுள்ளது. இத்தேர்வானது, தாள் 1 (15.11.2025) அன்று 13 தேர்வு மையங்களில் 3,213 தேர்வர்கள் மற்றும் 66 மாற்றுத்திறனாளி தேர்வர்கள் என 3,279 நபர்களுடன், 5 சொல்வதை எழுதுபவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தாள் 2 (16.11.2025) அன்று 38 தேர்வு மையங்களில் 10,264 தேர்வர்கள் மற்றும் 117 மாற்றுத்திறனாளி தேர்வர்கள் என 10,381 நபர்களுடன் 18 சொல்வதை எழுதுபவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
அதன்படி, தேர்வு நடைபெறும் தினங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான தேர்வு குழு கூட்டம் இன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்வு நடைபெறும் 2 நாட்களில், ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் பாதுகாப்பு பணிக்கு ஆயுதம் தாங்கிய காவலர்கள், வழித்தட அலுவலர் ஆகியோர் பணி நியமனம் செய்யப்படுவது குறித்தும், ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் தலா ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்படுவது குறித்தும், மேலும், தேர்வு நடைபெறும் இரண்டு நாட்களும் தடை இல்லா மின்சாரம், குடிநீர், தேர்வு மையங்களுக்கு காலை மற்றும் மதிய நேரங்களில் சிறப்பு பேருந்துகள், தயார் நிலையில் தீயணைப்பு வீரர்களுடன் வாகனங்கள், கழிவறை உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்படுவது குறித்தும், மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதும் மையங்களுக்கு உதவியாளர்களை அனுப்பி தேர்வறைக்கு சக்கர நாற்காலிகள் மூலம் அழைத்து சென்று அமர வைக்கவும், தேர்வு முடிவுற்றவுடன் அவர்களை அழைத்துச் சென்று பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணிகள் குறித்தும், மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருப்பது குறித்தும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும், தேர்வு மையங்களை சுற்றியுள்ள இடங்களை தூய்மையாகவும், சுகாதாரமாக வைத்திருக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்தன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.இ.மான்விழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.முகம்மது குதுரத்துல்லா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
%20(2)%20(1).jpg)
%20(1).jpeg)
