ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் கடந்த 2022 ம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையங்கள், சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை பணியின் அடிப்படையில் தேர்வு செய்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இன்று 03.01.2023 ம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் . V.சசிமோகன், I.P.S., அவர்கள் பரிசு கேடயம் மற்றும் காவலர்களுக்கு பண வெகுமதிகளை வழங்கி பாராட்டினார்.
ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தமைக்காக பெருந்துறை மற்றும் ஈரோடு தெற்கு காவல்நிலையங்களும், கஞ்சா, லாட்டரி விற்பனை போன்ற சட்ட விரோத செயல்கள் தடுப்பு நடவடிக்கைகளின் பேரில் வழக்குகள் பதியப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்தமைக்காகவும், நீதிமன்ற நிலுவை வழக்குகளில் அதிகபட்சமாக தண்டனை பெற்று தந்த வகையில் கடத்தூர் காவல் நிலையத்திற்கும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்ற நிலுவையில் இருந்த வழக்குகளை கோப்புக்கு எடுக்க செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்தியமைக்காக கடத்தூர் மற்றும் பவானி காவல் நிலையங்களுக்கும், நீதிமன்ற அழைப்பாணைகளை அதிகளவில் சார்வு செய்தமைக்காக அறச்சலூர் காவல் நிலையத்திற்கும், பிடிகட்டளைகள் அதிகளவில் நிறைவேற்றிமைக்காக ஈரோடு வடக்கு காவல் நிலையத்திற்கும், குற்ற வழக்குகளில் அதிகப்படியான குற்றவாளிகளை கைது செய்து சம்மந்தப்பட்ட வழக்கு சொத்துகளை பெருமளவில் மீட்டமைக்காக ஈரோடு நகர குற்றப்பிரிவு, ஈரோடு வடக்கு, பெருந்துறை, சித்தோடு, கோபிசெட்டிபாளையம் மற்றும் கவுந்தப்பாடி காவல் நிலையங்களுக்கும், சாலை விபத்து வழக்குகளில் அதிகப்படியான வழக்குகளில் புலன்விசாரணை முடித்து வழக்கு சம்மந்தமாக ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து சிறப்பாக செயல்பட்டமைக்காக பவானி காவல் நிலையத்திற்கும், கொடுங்குற்றம் வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தமைக்காக பெருந்துறை மற்றும் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் ஆகியவற்றிக்கு பரிசு கேடயங்கள் வழங்கப்பட்டன.
மேலும் குற்ற வழக்குகளில் துரித நடவடிக்கை மேற்கொண்டு எதிரிகளை கைது செய்தமைக்காகவும், களவு சொத்துகளை கைப்பற்றி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தும், நீதிமன்ற நடவடிக்கை மேற்கொண்டமைக்காக சித்தோடு காவல் ஆய்வாளர் திரு.முருகையன், ஈரோடு தெற்கு காவல் ஆய்வாளர் திருமதி.ஆர்.கோமதி, பெருந்துறை காவல் ஆய்வாளர் திருமதி.மசூதாபேகம் மற்றும் ஈரோடு தாலுக்கா காவல் ஆய்வாளர் திரு.சோமசுந்தரம் ஆகியோருக்கு பரிசு கேடயங்களும், CCTNS இணையதளம் வாயிலாக பெருமளவில் நீதிமன்ற அழைப்பாணைகளை சார்வு செய்தமைக்காக 4 தலைமை காவலர்கள், நீதிமன்ற நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு, சாட்சிகளை ஆஜர்படுத்தி வழக்கு விசாரணைக்கு உறுதுணையாக இருந்தமைக்காக 3 தலைமை காவலர்கள், காயச்சான்று, பிரேதபரிசோதனை, இரசாயன பரிசோதனை, வாகனச்சான்று போன்ற இதர துறைகளிலிருந்து பெறப்பட வேண்டிய சான்றுகளை விரைந்து பெற்றமைக்காக 3 காவலர்கள் மற்றும் அதிகப்படியான வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நற்செயலுக்காக 3 உதவி ஆய்வாளர்கள் ஆகியோருக்கு சிறந்த காவலர்களுக்கான பரிசு கேடயம் மற்றும் பண வெகுமதிகள் வழங்கியும் பாராட்டப்பட்டனர்.
மேலும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அனைவரும் சிறப்பாக பணிபுரிய அறிவுரைகள் வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்து ஊக்குவித்தார்.
பரிசு கேடயம் மற்றும் பாராட்டுகளைப் பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அனைவரும் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.