Type Here to Get Search Results !

ஈரோடு கனி மார்க்கெட்டில் இன்று 2-வது நாளாக கடை அடைப்பு...

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே கனி மார்க்கெட் (ஜவுளி சந்தை) செயல்பட்டு வருகின்றது. இங்கு 240 தினசரி கடைகளும், 720 வார சந்தை கடைகளும் உள்ளன. வாரந்தோரும் செவ்வாய்க்கிழமை ஜவுளி சந்தை நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கனி மார்க்கெட் வளாகத்தில் புதிய வணிக வளாகம் சுமார் ரூ.60 கோடி செலவில் 4 தளங்களுடன் 292 கடைகள் கட்டப்பட்டன. பணிகள் முடிவடைந்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் திறந்து வைக்கப்பட்டது.

கடைகள் ஒதுக்குவதற்காக ஏலம் விடப்பட்டது. அதன்படி ஒவ்வொரு கடைக்கும் சராசரியாக ரூ.8 லட்சம் வரை டெபாசிட் தொகையும், வாடகையாக ரூ.31 ஆயிரத்து 500 என நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் கடை வாடகை மற்றும் வைப்புத்தொகை அதிகமாக இருந்ததால் கடைகளை ஏலத்தில் எடுக்க வியாபாரிகள் யாரும் முன் வரவில்லை. இதனால் வணிக வளாகம் மக்களின் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.

வாடகையை குறைத்து ஏற்கனவே உள்ள ஜவுளி வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கனி மார்க்கெட் வியாபாரிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை முடிந்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்தோடு தற்போது புதிய வணிக வளாகத்தை சுற்றி உள்ள கடைகளை வியாபாரிகள் 60 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டுமென்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்த கால அவகாசம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து கடைகளை காலி செய்ய வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் ஜவுளி வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

இதை கண்டித்து கனி மார்க்கெட் ஜவுளி வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் 
ஈடுபட்டனர். இதனால் நேற்று நடைபெற வேண்டிய வாரச்சந்தை நடைபெறவில்லை.

இதனால் வெளியூரிலிருந்து வந்த வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர். இதனிடையே இதுதொடர்பாக ஜவுளி வியாபாரிகளுடன் அமைச்சர் முத்துசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது புதிய வணிக வளாகத்தில் வியாபாரிகள் ஏலம் எடுக்க வசதியாக டெபாசிட் தொகையை குறைப்பது தொடர்பாகவும், வாடகை அதிகமாக உள்ளதால் கடையை இரண்டாக பிரிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. விரைவில் சமூக தீர்வு காணப்படும் என்று அமைச்சர் மற்றும் மாநகராட்சி தரப்பில் உறுதியளித்தனர்.
ஆனாலும் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனை அடுத்து இன்று 2-வது நாளாக கனி மார்க்கெட் ஜவுளி வியாபாரிகள் கடைகளை அடைத்து உள்ளனர். இதனால் இன்றும் துணி எடுக்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதுகுறித்து ஈரோடு கனி மார்க்கெட் தினசரி அனைத்து சிறு ஜவுளி வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் செல்வராஜ் கூறியதாவது:- 

"புதிய வணிக வளாக கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன்பே ஏற்கனவே கடைகள் அமைந்துள்ள வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

ஆனால் வணிக வளாகம் திறக்கப்பட்ட பிறகு பொது ஏலம் அறிவிக்கப்பட்டது. அதிகமான வாடகை, வைப்பு தொகை நிர்ணயிக்கப்பட்டதால் எங்களால் கடைகளை வாடகைக்கு எடுக்க முடியவில்லை.

இந்நிலையில் கடைகளை திடீரென காலி செய்ய வேண்டும் என மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக கனி மார்க்கெட் மட்டுமே எங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. அமைச்சருடன் நடந்த பேச்சு வார்த்தையில் எங்களுக்கு தீபாவளி வரை வியாபாரம் செய்ய அனுமதி கொடுக்க வேண்டும் என்று கூறி இருந்தோம்.

அதேபோல் மாற்று இடம் தந்தாலும் நாங்கள் அங்கே செல்ல தயாராக இருக்கிறோம். சங்க கூட்டம் நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்."

இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.