தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எல்.கே.எம்.சுரேஷ் அவர்களின் தலைமையில் விசைத்தறி உரிமையாளர்கள், ஈரோடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்ததாவது:-
தமிழக அரசின் சார்பில் 228 விசைத்தறி கூட்டுறவு நெசவாளர் தொடக்க சங்கங்கள் மூலமாக 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் விலையில்லா வேட்டி-சேலைகள், பள்ளிக்கூட சீருடைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 2010-2011 ஆம் ஆண்டு வேட்டி உற்பத்திக்கு ரூ.16, சேலைக்கு 28 ரூபாய் 16 காசுகளும் வழங்கப்பட்டது. அதன்பிறகு 2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையும், 2015, 2019-ம் ஆண்டுகளிலும் கூலி உயர்த்தப்பட்டது.
கடந்த 2019-ம் ஆண்டு வேட்டிக்கு ரூ.24, சேலைக்கு ரூ.43 வழங்கப்பட்டது. அதன்பிறகு கூலி உயர்த்தப்படவில்லை. தொழிலாளர்களுக்கு ஊதியம், குடோன் வாடகை, மின் கட்டணம், விசைத்தறி உதிரி பாகங்களின் விலை, எலக்ட்ரானிக் பொருட்களின் விலை ஆகியன உயர்ந்து விட்டன. எனவே தமிழக அரசின் விலையில்லா வேட்டி-சேலைக்கு உற்பத்திக்கு 30 சதவீதம் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்.
தமிழக அரசின் 6 கூட்டுறவு நூற்பாலைகளில் இருந்து குறைந்த அளவிலான நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் விலையில்லா வேட்டியின் முதல்கட்ட உற்பத்தியும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே 15 நாட்களுக்குள் விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வேட்டி உற்பத்திக்கான காட்டன் நூல்களை வெளிமார்க்கெட்டில் இருந்து 500 டன் கொள்முதல் செய்ய வேண்டும்.
இதேபோல் கடந்த 2022-ம் ஆண்டு பள்ளிக்கூட சீருடை, 2023-ம் ஆண்டு வேட்டி-சேலை திட்டங்களில் நிலுவை தொகையையும், தற்போதைய பள்ளிக்கூட சீருடை திட்டத்துக்கான கூலித்தொகையை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.