ஈரோடு பெரிய அக்ரகாரம், பவானி மெயின் ரோடு, அன்னை சத்யா நகர் மற்றும் ஈரோடு மாவட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நல சங்கம் சார்பில் ஈரோடு மாநகராட்சியின் கமிஷனர் ஜானகி ரவீந்திரன் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது. அதில் கூறி இருப்பதாவது,
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பவானி ரோடு பகுதி 1 அன்னை சத்யா நகரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 448 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புகளில் ஏழை எளிய குடும்பத்தினர், முதியவர்கள் மற்றும் கணவனை இழந்தவர்கள் ஆகியோர் அதிகமாக வசித்து வருகிறோம் .
இந்நிலையில் இந்த வீடுகளுக்கு ஈரோடு மாநகராட்சி சொத்து வரி புதிய வரி விதிப்பின்படி ரூ. 1576 வரியாக செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது கூடுதலான தொகையாகும். இந்த தொகையை எங்களால் கட்ட முடியாத சூழ்நிலையில் உள்ளோம். மேலும் அரசு வழங்கப்பட்ட தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இவ்வளவு அதிகமான வரி விதிப்பு அதிர்ச்சியை அளிக்கிறது. எனவே இந்த குடியிருப்புகளுக்கு குறைந்த பட்ச தொகையை மட்டும் வரி விதிப்பு செய்து புதிய வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.