ஈரோடு மாநகராட்சி, வ.உ.சி. பூங்கா விளையாட்டரங்கில், நேற்று (28.09.2024) 2023 - 2024ம் ஆண்டுக்கான மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்..
இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
விளையாட்டு வீரர் வீராங்கனைகளின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் பொருட்டு 2024-2025ம் ஆண்டு மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு அரசால் அனைத்து மாவட்டத்திலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது.
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களால், ஈரோடு வ.உ.சி பூங்கா விளையாட்டு மைதானம், ரூ.7.57 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு கடந்த 02.08.2024 அன்று பயன்பாட்டிற்கு துவங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களால் சிவகங்கை மாவட்டத்தில் 10.09.2024 அன்று விளையாட்டுப் போட்டிகள் துவக்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களால் ஈரோடு மாவட்டத்தில் 10.09.2024 அன்று துவக்கி வைக்கப்பட்டு கடந்த 24.09.2024 வரை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
இக்கோப்பைக்கான போட்டிகள் பள்ளி, கல்லூரி, பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 (ஐந்து) பிரிவுகளில் நடத்தப்பட்டது. தடகளம், கூடைப்பந்து, பூப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, வளைகோல்பந்து, கபாடி, சிலம்பம், நீச்சல், மேஜைப்பந்து, கையுந்துபந்து, கைப்பந்து, கேரம், சதுரங்கம் மற்றும் கோ-கோ ஆகிய விளையாட்டுக்களில் போட்டிகள் நடைபெற்றது. முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வ.உ.சி. பூங்கா
விளையாட்டரங்கம், கொங்கு பொறியியல் கல்லூரி, நந்தா தொழில்நுட்பக் கல்லூரி,
கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் வேளாளர் பொறியில் கல்லூரி ஆகிய
இடங்களில் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிக்கு 21,626 மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ள பதிவு செய்யப்பட்டதில், சுமார் 13,000 த்திற்கும் மேற்பட்டோர் போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் முதலிடம் பெற்ற 708 வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மாநில அளவில் 04.10.2024 முதல் 24.10.2024 வரை நடைபெறவுள்ள போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளார்கள்.
அதன்படி, இன்றைய தினம் (28.09.2024) மாவட்ட அளவில் நடைபெற்ற இக்கோப்பைக்கான போட்டிகளில் பள்ளிகள் அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற 882 வீரர், வீராங்கனைகளுக்கும், கல்லூரி அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற 810 வீரர் வீராங்கனைகளுக்கும், பொதுமக்களுக்கான பிரிவில் முதல் மூன்று இடங்களை பெற்ற 336 வீரர், வீராங்கனைகளுக்கும், அரசு ஊழியர்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 174 வீரர்,வீராங்கனைகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் 210 வீரர், வீராங்கனைகளுக்கும் என மொத்தம் 2,412 வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஸ்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.