ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், அத்தாணி உள்வட்டம், குப்பாண்டம்பாளையம் கிராமம், ஸ்ரீ சரஸ்வதி மஹால் திருமண மண்டபத்தில் இன்று (24.10.2024) நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் 185 பயனாளிகளுக்கு ரூ.83.00 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
ஈரோடு மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்றைய தினம் (24.10.2024) அந்தியூர் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்று வருகின்றது. மனுநீதி நாள் முகாம் என்பது மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்களும் மாதந்தோறும் ஒரு கிராமத்தில் முகாமிட்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதே ஆகும்.
அந்த வகையில் இன்றைய தினம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 59 பயனாளிகளுக்கு ரூ.49,60,000/- மதிப்பீட்டில் இ-பட்டாக்களும், 4 பயனாளிகளுக்கு வாரிசுசான்றுகளும், 6 பயனாளிகளுக்கு பட்டாமாறுதல் ஆணைகளும், 18 பயனாளிகளுக்கு ரூ.2,294,915/- மதிப்பீட்டில் நத்தம் பட்டாக்களும், 11 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 27 பயனாளிகளுக்கு ரூ.72,250/- மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகையும், 10 பயனாளிகளுக்கு ரூ.2,20,000/- மதிப்பீட்டில் இயற்கை மரணம்/ ஈமச்சடங்கு உதவித்தொகையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.3,31,024/- மதிப்பீட்டில் சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியமும், 1 பயனாளிக்கு தென்னக்கன்றும், வேளாண் உழவர் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.1,38, 144/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவியும், 2 பயனாளிகளுக்கு ரூ.20,000/- மதிப்பீட்டில் மரக்கன்றுகளும், 2 பயனாளிகளுக்கு ரூ.18,000/- மதிப்பீட்டில் கரும்பு செயல்விளக்கமும், தொழிலாளர் நல வாரியம் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.55,000/- மதிப்பீட்டில் இயற்கைமரணம் / ஈமச்சடங்கு உதவித்தொகையும், 36 பயனாளிகளுக்கு ரூ.1,59,800/- மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகையும், 3 பயனாளிகளுக்கு ரூ.30,000/- மதிப்பீட்டில் திருமண உதவித்தொகையும், 2 பயனாளிகளுக்கு ரூ.12,000/- மதிப்பீட்டில் தீவிர நோய்பாதிப்பு உதவித்தொகையும் என மொத்தம் 185 பயானிகளுக்கு ரூ.83,11,133/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இத்திட்டம் வேறெந்த மாநிலத்திலும் இல்லை. இத்திட்டத்தின் மூலம் 1-ம் முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் சுமார் 40,000 மாணவ, மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் பணிக்கு செல்லும் பெற்றோர்கள் காலை நேரங்களில் தங்களுக்கு குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை தயாரித்து வழங்குவது என்பது அரிதான ஒன்றாக உள்ளது. எனவே, இத்திட்டத்தின் மூலம் மாணவ, மாணவியர்கள் காலை நேரங்களில் சத்தான உணவினை உண்டு, ஆரோக்கியமாகவும், ஆர்வத்துடனும் பயில்வதோடு, அவர்களின் கல்வி தகுதியும் மேம்பாடு அடைந்து வருகின்றது.
அதேபோல் 6 முதல் 12 -ம் வகுப்பு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று, கல்லூரியில் பயிலும் மாணவியர்களுக்கு புதுமைப் பெண் திட்டத்திலும், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்திலும் மாதந்தோறும் ரூ.1,000/- உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. நீங்கள் நலமா திட்டத்தில் பயனாளிகளிடம் நேரடியாக தொலைபேசியில் பேசும் பொழுது, இத்திட்டம் மிகுந்த பயனுள்ளதாகவும், மேலும் மேற்படிப்பினை தொடர்ந்து பயிலுவதற்கு உதவியாக உள்ளதாகவும் மாணவ, மாணவியர்கள் தெரிவித்தனர். எனவே இதுபோன்ற சிறப்பான திட்டங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இம்மனுநீதி நாள் முகாமில் அரசு துறைகளின் சார்பில் பல்வேறு கருத்து காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அரசின் திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற மனுநீதிநாள் முகாம்களில் கலந்து கொண்டு, தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அறிந்து, பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கிடும் வகையில் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவம், கால்நடைத் துறை, வேளாண்மை உழவர் நலத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, மகளிர் சுய உதவிக்குழு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து, இம்முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இம்முகாமில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், உதவி இயக்குநர்கள் உமாசங்கர் (ஊராட்சிகள்), சக்திவேல் (பேரூராட்சிகள்), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) செல்வராஜ், துணை இயக்குநர் (வேளாண்மை) திருமதி.சாந்தாமணி, அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன், குப்பபாண்டபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் பழனிவேல், திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்) திருமதி பூங்கோதை, அந்தியூர் வட்டாட்சியர் கவியரசு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

.jpeg)




.jpeg)
.jpeg)