கிங் ஸ்கார்பியன் புரொடக்சன் தயாரிக்கும் 'மலைகளின் இளவரசி' திரைபடத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. படத்தில் புதுமுகம் விஸ்வநாத் கதாநாயகனாக நடிக்க, அவருடன் ராஷ்மி, பூஜா, ஷமிதா, ராகவா ஹரிகேசவா, திருமலை அழகன், முத்து லட்சுமி, ஷிவானிகா, செந்தில்குமார், ஸ்வஸ்திகா உட்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு விஸ்வநாத் கதை, திரைக்கதை எழுதி டைரக்சன் செய்துள்ளார். ராகவா ஹரிகேசவா வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சௌமியன் இசை அமைக்க, பாடல்களை எஸ்.பி.சிவகுமார், ராகவா ஹரிகேசவா எழுதி உள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், மூணாறு, ஈரோடு மற்றும் சென்னையின் சில இடங்களில் நடந்துள்ளது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் (09.10.2024) நுங்கம்பாக்கத்தில் உள்ள லீ மேஜிக் லேண்டன் பிரிவியூ திரையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில், சென்னை-காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் கே.ராஜன் தலைமை தாங்கினார். இயக்குனரும் நடிகருமான அனுமோகன், நடிகர் பயில்வான் ரங்கநாதன், 'சித்தா' பட வில்லன் தர்ஷன், பாடலாசிரியர் எஸ்.பி.சிவகுமார் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு பேசினார்கள். விழாவுக்கு வந்த அனைவரையும் இயக்குனர் விஸ்வநாத் வரவேற்றார். முடிவில் ஒளிப்பதிவாளரும், வசனகர்த்தாவுமான வில்லன் நடிகர் ராகவா ஹரிகேசவா நன்றி கூறினார்.
மேலும், இந்த படத்தில் ஈரோட்டை சேர்ந்த தமிழ் ஆசிரியரும், திருமலை அழகன் திருக்குறள் உரை என்ற புத்தகத்தின் ஆசிரியருமான திருமலை அழகன் அவர்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.