ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொலவகாளிபாளையம், சவுண்டப்பூர், மேவானி கிராம ஊராட்சிகள் மற்றும் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் (23.10.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டார். மேலும் அலுவலகத்தின் சுற்றுப்புறங்களில் தூய்மையாக பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் 193 கடைகளுடன் ரூ.699.78 இலட்சம் மதிப்பீட்டில் தினசரி அங்காடி கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் செயல்படும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினையும், லக்கம்பட்டி பேரூராட்சியில் பேரூராட்சிகள் துறையின் சார்பில் அம்ரூத் 2.0 / கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்
கீழ் ரூ.198 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2.00 இலட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, தரைமட்ட தொட்டி மற்றும் மின்மோட்டார் அறையினையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ.9.40 இலட்சம் மதிப்பீட்டில் 10 வீடுகள் புனரமைக்கப்பட்டு வருவதையும்,
சவுண்டப்பூர் ஊராட்சி, எஸ்.கணபதிபாளையம் அருகில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளதையும், பொவலவகாளிபாளையம் ஊராட்சி, தாசம்பாளையத்தில் 15-வது நிதிக்குழு மான்யத்தின் கீழ் ரூ.78,000/- மதிப்பீட்டில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்து, தனிநபர் இல்ல குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதையும், தூய்மை பாரத இயக்கம், திரவக்கழிவு மேலாண்மை மற்றும் 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் மேவானியில் ரூ.2.00 இலட்சம் மதிப்பீட்டில் வடிகாலின் முடிவுப் பகுதியில் கிடைமட்ட வடிகட்டி அமைக்கப்பட்டுள்ளதையும் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின்போது, கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம், கோபிசெட்டிபாளையம் நகராட்சி தலைவர் என்.ஆர்.நாகராஜ், கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையாளர் திருமதி. சுபாஷினி, கோபிசெட்டிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வ.ஊ.) சக்திவேல், பிரேம்குமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.