Type Here to Get Search Results !

பால்வளத்துறை அமைச்சர் அவர்கள், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மற்றும் நவீன கால்நடை தீவன தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டு, 36 பயனாளிகளுக்கு ரூ.68.35 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளை வழங்கினார்.


ஈரோடு மாவட்டம், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மற்றும் நவீன கால்நடை தீவன தொழிற்சாலையில் இன்று (08.11.2024) மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் அவர்கள், நிர்வாக இயக்குநர் (தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், சென்னை) டாக்டர் எஸ்.வினித் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் ஆகியோர் தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ் அவர்கள் மற்றும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின்போது, மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையின்பேரில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பால் உற்பத்தி நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பால் உற்பத்தி பொருட்களானது அனைத்து தரப்பினரும் பயன்படுத்தக் கூடிய உணவு பொருளாகும். எனவே அதனை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் தயாரித்து வழங்குவது அரசின் கடமையாகும். அந்த வகையில் இன்றைய தினம் (08.11.2024) ஈரோடு மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பால் உற்பத்தி செய்யும் இடம் மட்டுமல்லாது, பால் விற்பனை செய்யும் நிலையங்களிலும் இடத்தினை தூய்மையாக பராமரிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஆவின் பால் கொள்முதலை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு கால்நடை தீவனம் தங்கு தடை இன்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோவை மாவட்டத்தில் பனீர் உற்பத்தி ஆலை துவங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு தீபாவளிக்கு கூடுதலாக பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் மற்ற நிறுவனங்களை விட பால் ஒரு லிட்டருக்கு 12 ரூபாய் குறைவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.ஈரோடு மாவட்டத்தில் ஆவின் நிறுவனம் மூலம் நாளொன்றுக்கு 1.74 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து ஆவின் பொது மேலாளர்களுக்கும் விற்பனையினை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


இந்த ஆய்வின்போது, பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், பால் உற்பத்தியாளர்கள் சங்கம், பால் தொகுப்பு குளிர்விப்பு நிலையம், ஈரோடு பால் பண்ணை அதி நவீன பாலகம் (Hi-Tech Parlour) மற்றும் கால்நடைத் தீவனத் தொழிற்சாலை ஆகியவற்றில் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.


தொடர்ந்து, 21 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.13.86 இலட்சம் மதிப்பீட்டில் கறவை மாடு பராமரிப்பு கடனுதவியும், 10 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் கறவை மாடு வங்கி கடனுதவியும், ஒரு பால் உற்பத்தியாளருக்கு ரூ.9.40 இலட்சம் மதிப்பீட்டில் கால்நடை தொழுவம் அமைப்பதற்கு கடனுதவியும், 2 பயனாளிகளுக்கு ரூ.17,000/- மதிப்பீட்டில் திரவ நைட்ரஜன் சினை ஊசி குடுவை கடனுதவியும், மாவட்ட தொழில் மையம் சார்பில் பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 2 உறுப்பினர்களுக்கு ரூ.24.92 இலட்சம் மதிப்பீட்டில் கறவை மாடு வாங்கி தொழில் செய்வதற்கான கடனுதவியும் என 36 பயனாளிகளுக்கு ரூ.68.35 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளை வழங்கினார்.


மேலும், ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், பால் கொள்முதல் திறன், உற்பத்தி திறன், பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை விவரங்களை ஆவின் உயர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் பால் கொள்முதல் திறன், தரம் மற்றும் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.







அதனைத் தொடர்ந்து, சென்னிமலை சாலையில் உள்ள நவீன கால்நடை தீவன தொழிற்சாலையில் ஆலையின் உற்பத்தி, தீவன ஆலை இயக்குதல் முறை, கச்சாப்பொருட்களின் விபரங்கள் ஆகியவற்றை கேட்டறிந்தார். மேலும், தீவன ஆலையின் செயல்பாடுகள், ஆலையின் தானியங்கி முறை, பல்வேறு வகையான குச்சித் தீவன உற்பத்தி, குச்சி தீவன உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கச்சா பொருட்களின் விபரம் ஆகியவற்றினை கேட்டறிந்தார்.


இந்நிகழ்வுகளில் மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி. சு.நாகரத்தினம், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், பொது மேலாளர் (பொறுப்பு) / மாவட்ட வருவாய் அலுவலர் பி.குமரேஸ்வரன், துணைப் பொது மேலாளர் (கால்நடை) மரு.பி.பழனிசாமி, துணைப்பதிவாளர் (பால் வளம்) இரா.கணேஷ், உதவி பொது மேலாளர்கள் மரு.பி.சண்முகம் (ANO), திருமதி.பி.உதயகலா (பொறியியல்), மேலாளர் (தரக்கட்டுப்பாடு) மரு.எம்.ஹரிபிரசாத் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.






Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.