Type Here to Get Search Results !

நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள், தேசிய மற்றும் பன்னாட்டளவில் விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க ஊக்க உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்.


ஈரோடு மாவட்டத்தில், தொழிலாளர் துறையின் சார்பில் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள், தேசிய மற்றும் பன்னாட்டளவில் விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க ஊக்க உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது,

தமிழ்நாட்டிலுள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982-ம் ஆண்டில் தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது. உடலுழைப்புத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு 17.03.1999 அன்று தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நலவாரியம் உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2006 முதல் 2011 வரை 15 தனி நலவாரியங்களும் உருவாக்கப்பட்டன.

தற்போது, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நலவாரியம், தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு முடிதிருத்துவோர் நலவாரியம், தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு கைவினைத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறிப்பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு காலணி, தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு ஓவியர் நலவாரியம், தமிழ்நாடு பொற்கொல்லர் நலவாரியம், தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு விசைத்தறி நெசவாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு பாதையோர வணிகர்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு சமையல் மற்றும் உணவகத்தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் (Gig) தொழிலாளர்கள் நலவாரியம் என ஆக மொத்தம் 19 நலவாரியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் 30.11.1994 அன்று அரசால் ஏற்படுத்தப்பட்டது. இவ்வாரிய நலத்திட்டத்தின் அட்டவணையில் பட்டியலிடப்பட்ட தொழில் இனங்களான கல் உடைப்பவர் (அ) கல் வெட்டுபவர் (அ) கல்பொடி செய்பவர், கொத்தனார் (அ) செங்கல் அடுக்குபவர், தச்சர், பெயிண்டர் அல்லது வார்னிஷ் பூசுபவர், கம்பி வளைப்பவர் உட்பட பிட்டர், சாலை குழாய் பதிப்பு பணியாளர், எலக்ட்ரிஷியன், மெக்கானிக், கிணறு தோண்டுபவர், வெல்டர் என 53 வகையான தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.









அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் ஓட்டுநர் பணி, தையல், ஓவியர், பனைமரத் தொழில், சலவைத் தொழில், முடிதிருத்தும் தொழில், கைவினைத் தொழில், காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடுதல் தொழில், மண்பாண்டத் தொழில், கைத்தறி மற்றும் விசைத்தறி தொழில் உட்பட மொத்தம் 60 வகையான தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் 01.11.2008 அன்று முதல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதன்படி, 30.10.2024 19 வரை அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் மொத்தம் 1,23,437 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். தொழிலாளர் நலத்துறையில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு உதவித்தொகை, கண் கண்ணாடிக்கான உதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை, விபத்து மரண நிவாரணத்தொகை, பணியிடத்து விபத்து மரண நிவாரணத்தொகை, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, தற்போது அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள், உரிய அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் தேசிய அளவில் பங்கேற்கும் பொழுது பங்கேற்கும் ஆண்டில் ஒரு முறை மட்டும் 25 ஆயிரம் ரூபாயும், பன்னாட்டளவில் பங்கேற்கும் பொழுது பங்கேற்கும் ஆண்டில் ஒரு முறை மட்டும் 50 ஆயிரம் ரூபாயும் ஊக்க உதவித்தொகையாக வழங்கிட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.








உரிய அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் ஊக்க உதவித்தொகை பெற ஏதுவாக தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழில்களில் மேற்கொள்பவராக இருப்பின் அவர்கள் www.tnuwwb.tn.gov.in என்ற துறையின் இணையதளம் வாயிலாக ஊக்க உதவித்தொகை பெற விண்ணப்பித்து பயன்பெறுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகின்றது.

மேலும், இதர நலத்திட்டங்கள் தொடர்பான விவரங்களுக்கு ஈரோடு, சென்னிமலை சாலை, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் பின்புறம் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிட வளாகத்தில் கீழ்தளத்தில் இயங்கி வரும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0424 - 2275591, 2275592 என்ற அலுவலக தொலைபேசி எண்கள் மூலமாகவோ, கடிதம் மூலமாகவோ அல்லது அலுவலக lossserode@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் தெரிவித்துள்ளார்.







Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.