ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (11.11.2024), வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் 2024 தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம், ஈரோடு மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் Dr. C.N. மகேஸ்வரன் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அவர்கள் தெரிவித்ததாவது:
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றம் முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறுவதை கண்காணிக்க இந்திய முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களை நியமிக்கப்பட்டுள்ளனர். 18 வயது நிரம்பிய அனைவரும் விடுபடாத வகையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட வேண்டும். இறந்தவர்களின் பட்டியலை பெற்று அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிட வேண்டும். மேலும் இடம் பெயர்ந்த வாக்காளர்களையும் கண்காணித்திட வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் 16.11.2024 (சனிக்கிழமை), 17.11.2024 (ஞாயிற்றுகிழமை), 23.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 24.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நான்கு நாட்கள் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் 8 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2222 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறவுள்ளது.
மேலும், சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களைத்தவிர வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் மற்றும் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் 28.11.2024 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பொது மக்களிடமிருந்து படிவங்கள் பெறப்படும். மேலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தி, 18 வயது நிரம்பிய அனைவரின் பெயரையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷ்.என்., மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர்கள் ப.ரவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, துணை ஆட்சியர் (பயிற்சி) கே.சிவபிரகாசம், தேர்தல் வட்டாட்சியர் சிவசங்கர், அனைத்து வட்டாட்சியர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.