ஈரோடு மாவட்டத்தில் உள்ள 76 க்கும் மேற்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பாக ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு (பேட்டியா) உள்ளது. இந்த கூட்டமைப்பின் வெள்ளி விழா ஆண்டினையொட்டி ஈரோடு நசியனூர் சாலை வீரப்பம்பாளையம் விவேகானந்தா வீதியில் சங்க கட்டிடம் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டு, நவீன வசதிகள் மற்றும் அலங்கார பணிகள் நடைபெற்றது.
புதிய பொலிவுடன் அமைக்கப்பட்ட சங்க கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கூட்டமைப்பின் தலைவர் வி.கே.ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் பி.ரவிச்சந்திரன், பொருளாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் துரைசாமி, இயக்குநர் சாந்தி துரைசாமி ஆகியோர் பங்கேற்று 'பேட்டியா சக்தி மசாலா அரங்கினை' ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். அரங்கத்தை முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உணவு அரங்கத்தை ஈரோடு இந்து கல்வி நிலையத்தின் தாளாளர் கே.கே.பாலுசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். வெள்ளி விழா ஆண்டு கூட்டரங்கினை ஒளிரும் ஈரோடு தலைவர் எம்.சின்னசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதையடுத்து நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் பேட்டியா கூட்டமைப்பினையும், நிர்வாகிகளையும் வாழ்த்தி பேசினர். பேட்டியா கட்டிடத்திற்கு நன்கொடை வழங்கிய சங்கங்களையும், கவுரவ உறுப்பினர்களுக்கும் நினைவு பரிவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்டத்தின் முக்கிய பிரமுகர்கள், கூட்டமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.