கழகத்தை விட்டு பிரிந்து சென்றுள்ள அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும், அப்போதுதான் அதிமுக வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் மற்றும் கோபி MLA கே ஏ செங்கோட்டையன் தெரிவித்தார்.
கடந்த பல மாதங்களாகவே கே ஏ செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனநிலையில் இருந்ததாக அறியப்படுகிறது. மேலும், அவரது பெயரை கூட பொதுக் கூட்டங்களில் சொல்லவில்லை. இந்த நிலையில் அவர் கோபியில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் அளித்த பேட்டி: எம்ஜிஆர் காலத்தில் இருந்து கிளை கழக உறுப்பினர்,சட்டமன்ற உறுப்பினர் அமைச்சராக அவர் பணியாற்றிய வரை தனது வாழ்க்கையை அவர் விவரித்தார். பின்னர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனதும் அவர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினார். எனக்கு இரண்டு முறை வாய்ப்பு வந்த போதும் அதை மறுத்தேன். கழகத்தின் ஒற்றுமைக்காகவும் அதன் வலிமைக்காகவும் பல சந்தர்ப்பங்களில் கட்டுப்பாட்டுடன் நான் நடந்து கொண்டேன். 2021 தேர்தலுக்குப் பிறகு கட்சியை விட்டு பலர் வெளியேறினர். அதற்குப் பிறகு கழகம் தொடர்ந்து பல தேர்தலில் தோல்வியடைந்தது. 2024 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 30 தொகுதிகளில் வெற்றி அடைந்திருக்கலாம். தேர்தலில் தென் மாவட்டங்களில் கட்சி மோசமான தோல்வியை சந்தித்தது. நான் உட்பட ஆறு முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடியை நேரடியாக சந்தித்து கழகத்தை விட்டு சென்றவர்களை மீண்டும் கட்சியில் ஒருங்கிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். மேலும் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடமும் இது குறித்து கூறினோம். ஆனால், யார் கருத்தையும் ஏற்க வில்லை. பல சந்தர்ப்பங்களில் அவரிடம் பேசுவதற்கு முயன்றும் அவர் இது சம்பந்தமாக பேசவில்லை. முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ஆர் தனக்கு எதிராக ஊழல் புகார் அளித்த முன்னாள் அமைச்சர் எஸ் டி சோமசுந்தரம் மற்றும் சிலரை அவர் வீட்டுக்கே சென்று கழகத்தில் ஒருங்கிணைத்தார். அதே போன்று அவர் மறைவுக்குப் பின் வந்த வந்த ஜெயலலிதாவும் கழகத்தை விட்டு பிரிந்தவர்கள் மற்றும் தன்னை விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் கூட கட்சியில் ஒருங்கிணைத்தார். அவர்கள் இருவரும் மாபெரும் தலைவர்கள், தமிழகம் அவர்களால் ஏற்றம் பெற்றது. இப்பொழுது கூட எனக்கு தமிழகம் நன்றாக இருக்க வேண்டும். தமிழக மக்கள் வளமாக வாழ வேண்டும். இந்த கழகத்தை நம்பி உள்ள கோடான கோடி தொண்டர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பிரிந்து சென்ற அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். இதைத்தான் மக்களும் தொண்டர்களும் எதிர்பார்க்கிறார்கள். மக்கள் இப்பொழுது ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். எனவே கழகம் ஒருங்கிணைந்தால் தான் நாம் புரட்சித் தலைவர் புரட்சித்தலைவியின் ஆட்சி கொண்டுவர முடியும். மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியும். 10 நாட்களுக்குள் இதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்.கட்சியிலிருந்து பிரிந்து சென்ற முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரையும் கட்சியில் ஒருங்கிணைக்க வேண்டும். தேர்தல் நெருங்கி வருகிறது. அனைவரும் களப்பணி ஆற்ற வேண்டும். எனவே விரைந்து என் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொண்டர்கள் சார்பாக கூறுகிறேன், என்று அவர் குறிப்பிட்டார்.
