நமக்கு நாமே திட்டம் பொதுமக்களின் பங்களிப்பு ரூ.30 லட்சம். திட்டப்பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்... - ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் தகவல்
March 11, 2022
0
ஈரோடு, மார்ச் 11-
மக்களின் சுய சார்பு தன்மையை ஊக்குவிக்கவும், பலப்படுத்தவும், மக்களுக்கு தேவையான திட்டங்களை அவர்களது பங்களிப்புடன் செயல்படுத்தி பொதுச் சொத்துக்களை உருவாக்கி பராமரித்து வருவதே நமக்கு நாமே திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் குறிப்பாக சாலை, சாக்கடை, குடிநீர், சுற்றுச்சுவர்கள் கட்டுவது, கழிப்பிட வசதி, புதிய கட்டிடங்கள் கட்டுவது என பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளமுடியும். ஊரக உள்ளாட்சிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் விரிவாக்கம் செய்து அறிவித்துள்ளார். இதற்காக மாநில அளவில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் பங்களிப்பாக இதுவரை இத்திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ள ஈரோடு மாநகராட்சி பகுதியில் ரூ.30 லட்சம் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாகராட்சி ஆணையாளர் சிவக்குமார் கூறியதாவது:-
ஈரோடு மாநகராட்சி நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. திட்டப்பணிகளின் மதிப்பீட்டில் குறைந்த பட்சம் மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்பு நிதி இருக்க வேண்டும். இதன்படி பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்த பொதுமக்களிடமிருந்து ரூ.30 லட்சம் நிதி வந்துள்ளது. மாகராட்சி சார்பில் இதே அளவு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டப்பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். திட்டத்திற்கான முழு தொகையையும் பொதுமக்களே வழங்க முன்வந்தால் அவர்களே பணிகளையும் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Tags