விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இன்று நடைபெற்றது.
March 25, 2022
0
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று
(25.03.2022) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்
ஹெச்.கிருஷ்ணனுண்ணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் தங்களின்
கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்த
கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் துறை சார்ந்த
அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்
ஹெச்.கிருஷ்ணனுண்ணி அவர்கள் தெரிவித்ததாவது,
ஈரோடு மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழையளவு 733.44 மிமீ ஆகும்.
25.03.2022 முடிய 11.97 மி.மீ பெய்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம்
குற்போது 88.52 அடியாகவும், 20.61 டி.எம்.சி நீர் இருப்பும் உள்ளது. ஈரோடு
மாவட்டத்தில் மார்ச்-2022-ஆம் மாதம் முடிய 98591 எக்டர் பரப்பில் வேளாண்
பயிர்களும், 57826 எக்டர் பரப்பில் தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி
செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில் நெல் விதைகள் 346 மெட்ரிக் டன்னும்,
சிறுதானியங்கள் 39.5 மெட்ரிக் டன்னும், பயறுவகைகள் 21 மெட்ரிக் டன்னும்,
எண்ணெய் வித்துக்கள் 146 மெட்ரிக் டன் விதைகளும் விநியோகம்
செய்யப்பட்டுள்ளன. இரசாயன உரங்களான யூரியா 1283 மெட்ரிக் டன்னும், டி.எ.பி
1083 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 1604 மெட்ரிக் டன்னும் மற்றும் காம்ப்ளக்ஸ்
5162 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளது. நடப்பு பருவத்திற்கு தேவையான
இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில்
வேளாண்மைத்துறைக்கு 2450 எக்டர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 2726 எக்டர்
இலக்கு எட்டப்பட்டுள்ளது. தோட்டக்கலைத்துறையின் மூலம் நுண்ணீர் பாசன
திட்டத்தில் 3600 எக்டர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 2254 எக்டர் இலக்கு
எட்டப்பட்டுள்ளது.
தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள கீழ்பவானி மற்றும் தடப்பள்ளி
அரக்கன்கோட்டை ஆயக்கட்டு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடை
செய்யப்பட்டு வருவதால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் 53
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கினைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்
தேர்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சிகளில் தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு அவற்றை
சாகுபடிக்கு கொண்டுவந்து உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு
வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம்
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான
இயக்கத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் தேக்கு, மகோகனி, வேம்பு, மலைவேம்பு,
நாவல், புளியன், பெருநெல்லி, செம்மரம் உள்ளிட்ட தரமான மரக்கன்றுகள் மொத்தம்
3,11,800 எண்ணிக்கையில் ரூ.46.77 இலட்சம் மதிப்பீட்டில் நமது மாவட்டத்திலுள்ள
14 வட்டாரங்களிலும் உள்ள விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் விவசாயிகளுக்கு தேவையான இதர இடுபொருட்கள் அந்தந்த பகுதிகளில்
உள்ள வட்டார மற்றும் துணை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில்
இருப்பு வைக்கப்பட்டுள்ளன விவசாயிகள் இவற்றைப் பெற்று பயன்பெறலாம் என
தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி, மாவட்ட
ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன்,
செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) விஸ்வநாதன், துணை
இயக்குநர் (தோட்டக்கலை) தமிழ்செல்வி, ஈரோடு விற்பனைக்குழு முதுநிலை
செயலாளர் சாவித்திரி, துணை இயக்குநர் (வேளாண் வணிகம்)
சண்முக சுந்தரம் உட்பட மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர்
(நிலம்) கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், செயற்பொறியாளர்,
நீர்வள ஆதாரதுறை, கீழ்பவானி வடிநிலகோட்டம் மற்றும் பவானிசாகர் அணை
கோட்டம் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள், விவசாய
சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.