Type Here to Get Search Results !

டி.என்.பாளையம் அருகே நாட்டுவெடிகுண்டை கடித்த பசுமாட்டின் வாய் சிதைவு

ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் அண்ணா நகர் வடக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் (27). இவர் தனது தோட்டத்தில் கொட்டகை அமைத்து பசு மாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று மதன்குமார் தோட்டத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு தனது மாடுகளை விட்டு இருந்தார். பின்னர் மீண்டும் மாலை மாடுகள் வீடு திரும்பியது. அப்போது ஒரு பசு மாட்டின் வாய் சிதைந்து ரத்தம் சொட்ட சொட்ட இருப்பதை கண்டு மதன்குமார் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பங்களாப்புதூர் போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாட வனப்பகுதியையொட்டிய இடங்களில் வைக்கப்பட்ட நாட்டுவெடியை மாடு கடித்ததில் வாய் சிதைந்து ரத்த காயங்கள் ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் வாய் சிதைந்த பசு மாட்டிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் சமூக விரோதிகள் சிலர் காட்டு பன்றிகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். வனப்பகுதியில் தூக்கி வீசப்படும் நாட்டு வெடிகுண்டுகளை அவ்வப்போது மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளும் கடித்து பலியாகும் சம்பவம் நடந்து வருகிறது. எனவே இதுபோன்ற நாட்டு வெடிகுண்டுகளை வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.