தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி - ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அவர்கள் தொடங்கி வைத்தார்.
March 22, 2022
0
ஈரோடு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இன்று (22.03.2022) உலக தண்ணீர்
தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அவர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், உலக தண்ணீர் தின
விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து, தொடங்கி வைத்தார்.
உலக தண்ணீர் தினம் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 22-நாள்
கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது
குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் உலக தண்ணீர் தினத்தின்
நோக்கமாகும். மேலும் தண்ணீர் வளம் குறித்து அறியாதவற்றை அறியவைப்பதே
இதன் நோக்கமாகும். உலக தண்ணீர் தினத்தை ஒரு நாளாக மட்டும்
கடைபிடிக்காமல் ஒவ்வொரு நாளும் தண்ணீரின் தேவையையும், சிக்கனத்தையும்
மனதில் வைத்தே செயல்பட வேண்டும்.
அந்த வகையில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர்
ஹெச்.கிருஷ்ணனுண்ணி அவர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்
சார்பில், உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணியினை தொடங்கி வைத்தார்.
இப்பேரணியானது, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தொடங்கி
தியாகி குமரன் சாலை சம்பத் நகர் வரை சென்றடைந்தது. மேலும், இப்பேரணியில்
சி.என்.சி. கல்லூரியைச் சேர்ந்த தேசிய மாணவர் படை (NCC) மாணவ,
மாணவியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய
பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு, விண்ணின் மழைத்துளி மண்ணின்
உயிர்த்துளி, மழைநீர் நமது உயிர் நீர் என சூளுரைப்போம், அதனை மனதில்
செதுக்குவோம், மரம் வளர்ப்போம், மழைபெறுவோம், மழைநீரை சேகரிப்போம், நமது
குடிநீர், நமது சுகாதாரம், நமது கையில், தரமான குடிநீர் தாகம் தீர்க்கும், தேகம்
காக்கும், நீரை காய்ச்சி பருகுவோம், நோயற்று இருப்போம், வான் மழைநீரை மாசு
இல்லாமல் காப்போம், நீரினால் பரவும் நோய் இனி இல்லை என்போம் உள்ளிட்ட
தண்ணீர் சேமிப்பு குறித்த பதாகையை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இப்பேரணியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக
வளர்ச்சி முகமை, லி.மதுபாலன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய
மேற்பார்வை பொறியாளர் என்.முரளி, நிர்வாகப் பொறியாளர்கள்
ஆர்.பொன்னுசாமி, டி.எஸ்.லலிதா, உதவி மேற்பார்வை பொறியாளர்
கே.ஜி.சுதாமகேஷ், உதவி நிர்வாக பொறியாளர் எம்.மாதேஸ்வரன்
உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.