பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தமிழில் பேச்சுப் போட்டிகள். முதல்பரிசாக ரூ.5000/- ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி தகவல்.
April 06, 2022
0
தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்
நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி
மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பேச்சுப் போட்டிகள் நடத்திப்
பரிசுகள் வழங்கப்படவுள்ளன. 2022-2023 ஆம் நிதியாண்டில் ஏப்ரல் 14-ஆம் நாள்
அண்ணல் அம்பேத்கார் அவர்களின் பிறந்தநாளையொட்டி 19.04.2022 அன்று
பேச்சுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. பள்ளிப்போட்டி காலையில் 10.00 மணி
முதலும் கல்லூரிப் போட்டி பிற்பகல் 3.00 மணி முதலும் ஈரோடு மாவட்ட ஆட்சியரக
2ஆம் தளக் கூட்ட அரங்கில் நடைபெறும்.
மாணவர்கள் பேச்சுப் போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை
அவர்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியர் / கல்லூரி முதல்வரிடமிருந்து பெற்றுக்
கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதல்வர் /
தலைமையாசிரியர் ஒப்பம் பெற்று போட்டி நாளன்று தமிழ் வளர்ச்சித் துணை
இயக்குநரிடம் நேரில் அளிக்க வேண்டும். ஒரு பள்ளி / கல்லூரியிலிருந்து
போட்டிக்கு இரண்டு (2) மாணவர்கள் வீதம் மட்டுமே கலந்துகொள்ள
அனுமதிக்கப்படுவர்.
போட்டிக்கான தலைப்புகள், மாணவர்களுக்கு முன்னதாகத்
தெரிவிக்கப்பட மாட்டாது. சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்ககத்திலிருந்து
முத்திரையிடப்பட்ட உறைகளில் அனுப்பப்படும். தலைப்புகள் போட்டியின் போது
நடுவர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் பிரிக்கப்பட்டு அறிவிக்கப்படும்.
போட்டிகள் ஒரே நாளில் நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
மாவட்ட அளவில் பள்ளி / கல்லூரிப் போட்டியில் வெற்றிபெறும்
மாணவர்களுக்கு முதல்பரிசாக ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/*, மூன்றாம்
பரிசு ரூ.2000,“ என்ற வகையில் வழங்கப்படும். மேலும் பள்ளி மாணவர்களுக்கென
நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் மட்டும் பங்கேற்ற மாணவர்களுள், அரசுப் பள்ளி
மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும்
சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2000, வீதம் வழங்கப்படும் என ஈரோடு மாவட்ட
ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அவர்கள் தெரிவித்துள்ளார்.