Type Here to Get Search Results !

மகளிர்‌ உரிமைகள்‌, பாதுகாப்பு மற்றும்‌ வாழ்வாதார மேம்பாடு குறித்து ஆய்வுக்‌ கூட்டம்‌

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ நேற்று (07.04.2022) சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறையின்‌ சார்பில்‌, தமிழ்நாடு மாநில மகளிர்‌ ஆணையத்‌ தலைவர்‌ ஏ.எஸ்‌.குமாரி அவர்கள்‌ தலைமையில்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஹெச்‌.கிருஷ்ணனுண்ணி அவர்கள்‌ முன்னிலையில்‌ மகளிர்‌ உரிமைகள்‌, பாதுகாப்பு மற்றும்‌ வாழ்வாதார மேம்பாடு குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.
இக்கூட்டத்தில்‌ தமிழ்நாடு மாநில மகளிர்‌ ஆணையத்‌ தலைவர்‌ ஏ.எஸ்‌.குமாரி அவர்கள்‌ பேசியதாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ பெண்களின்‌ நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்‌. மகளிருக்கு இலவச பேருந்து கட்டணம்‌ மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளார்கள்‌. அதன்மூலம்‌ பெண்களுக்கு மாதம்‌ சேமிப்பு தொகையாக உருவாக்குவதற்கு வழிவகை செய்துள்ளார்கள்‌. மகளிர்‌ சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு கடனுதவிகளை வழங்கி, அவர்களுக்கு பல்வேறு திறன்‌ பயிற்சிகளையும்‌ வழங்கியதன்‌ மூலம்‌ பெண்கள்‌ பல்வேறு தொழில்‌ செய்து குடும்பத்திற்கு வருமானத்தை ஈட்டியுள்ளார்கள்‌. எங்களுக்கு வரும்‌ கோரிக்கை மனுக்களில்‌ அதிகமாக குழந்தை திருமணம்‌, வரதட்சணை கொடுமை பற்றி அதிகமாக வருகிறது. குறிப்பாக கிராமப்புறத்தில்‌ இருந்து அதிக மனுக்கள்‌ வருகிறது. கிராமப்புறங்களில்‌ உள்ள பஞ்சாயத்து தலைவர்கள்‌ உள்ளிட்ட குழுக்கள்‌ மூலம்‌ கண்காணித்து வந்தால்‌ இப்பிரச்சனைகளுக்கு எளிதாக தீர்வு காண முடியும்‌. பள்ளிக்கல்வித்துறை மூலம்‌ பெற்றோர்‌ ஆசிரியர்‌ கூட்டம்‌ நடத்தி மாணவர்களின்‌ மதிப்பெண்களை மட்டுமே சாராமல்‌, மாணவ, மாணவியர்களின்‌ நலன்களை பற்றி பேசுவதற்கான கூட்டமாக நடத்திட வேண்டும்‌. காவல்துறையினர்‌ மகளிருக்கு நம்பிக்கை ஏற்படும்‌ வகையில்‌, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்‌ நடத்தப்பட்டு வருகிறது. இதனை மேலும்‌ அதிகப்படுத்திட வேண்டும்‌. புகார்‌ பெட்டி இல்லாத பள்ளிகளில்‌ புகார்‌ பெட்டி அமைத்து, வாரத்திற்கு ஒருமுறையாவது, புகார்கள்‌ குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்‌.
மேலும்‌ காவல்‌ துறை மூலம்‌ பள்ளிகளில்‌ மாணவ, மாணவியர்களுக்கு வாரத்திற்கு 2 மணிநேரமாவது விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்‌. குறும்படங்கள்‌ மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ பொழுது மாணவ, மாணவியர்களுக்கு அடிமனது வரை சென்றடையும்‌. பேருந்து நிறுத்தத்தில்‌ மாணவியர்கள்‌ பேருந்தில்‌ ஏறும்‌ வரை காவல்‌ துறை மூலம்‌ தொடர்ந்து கண்காணித்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்‌. பெண்களுக்கான உதவி எண்‌ 181 (Toll free No) குறித்து, பொதுமக்கள்‌ அதிகம்‌ கூடும்‌ இடங்களில்‌ விளம்பர பதாகைகள்‌ வைக்க வேண்டும்‌. மேலும்‌ 1098 குழந்தைகளுக்கான உதவி எண்‌ குறித்து அதிகப்படியான விளம்பரங்களை ஏற்படுத்திட வேண்டும்‌. தொழில்‌ நிறுவனங்களில்‌ பெண்களுக்கான உரிய பாதுகாப்பு குழு அமைத்து செயல்படுத்திட வேண்டும்‌. பள்ளிகளில்‌ இடைநிற்றலை தவிர்க்கும்‌ வகையில்‌ மலைவாழ்‌ பகுதியில்‌ வசிக்கும்‌ குழந்தைகளை கண்காணித்து, அவர்களுக்கு தொடர்ந்து கல்வி அளித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌. என தெரிவித்தார்‌.
தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை, காவல்துறை, உயர்கல்வி துறை, தேசிய குழந்தை தொழிலாளர்‌ ஒழிப்பு, மகளிர்‌ திட்டம்‌, ஒருங்கிணைந்த குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகு, பொது மருத்துவத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு ஆய்வு மேற்கொண்டு, துறைவாரியான மனுக்களை உரிய அலுவலர்களிடம்‌ வழங்கி, அம்மனுக்களின்‌ மீது விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌ என அறிவுறுத்தினார்‌. இக்கூட்டத்தில்‌, தமிழ்நாடு மாநில மகளிர்‌ ஆணைய உறுப்பினர்‌ கீதா நடராஜன்‌, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ ச.சந்தோஷினி சந்திரா, கோபிசெட்டிபாளையம்‌ வருவாய்‌ கோட்டாட்சியர்‌ பழனிதேவி, திட்ட அலுவலர்‌ (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள்‌) பூங்கோதை, மாவட்ட சமூக நல அலுவலர்‌ ச.சண்முகவடிவு, தாய்சேய்‌ நல அலுவலர்‌ (பொது சுகாதாரத்துறை) கெளசல்யாதேவி, காவல்‌ ஆய்வாளர்‌ (அனைத்து மகளிர்‌ காவல்‌ நிலையம்‌) கே.நீலாதேவி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.