ஈரோட்டில் 11.07.2022 இன்று ஆதித்தமிழர் பேரவை சார்பாக அதன் மாவட்டச் செயலாளர் இரா. இராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில், ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் சட்ட விரோதமாக கருமுட்டை எடுத்துள்ள விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சுதா மருத்துவ மனையின் மருத்துவர்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் நா. பழனிச்சாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் கோட்டைமேடு ஆ. ராஜா, மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் ப. மோகன், மாவட்டத் துணை செயலாளர் மு. கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் "16 வயது சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்துள்ள சுதா மருத்துவமனை மருத்துவர்களை உடனடியாக கைது செய்! மருத்துவமனை அங்கீகாரத்தை ரத்து செய்!, எளிய மக்களை மட்டும் கைது செய்துள்ள காவல் துறை குற்றம் செய்ய மூல காரணமான மருத்துவர்களை கைது செய்யாமல் காப்பாற்றுவது ஏன்?, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசியலமைப்பை புறக்கணிக்காதே!, மக்கள் போராட்டமே மாற்றங்களை உருவாக்கியுள்ளது! போராட தூண்டாதே!, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கிடு" போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையின் மாநில தலைமை நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாநகரம், பெருந்துறை, கொடுமுடி, மொடக்குறிச்சி, சென்னிமலை ஆகிய பகுதியைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.