சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில், மாவட்டத்துக்கு ஒரு ஊராட்சி என்ற அடிப்படையில் கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு 'முன் மாதிரி கிராம விருது' அறிவிக்கபட்டுள்ளது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிக்கு கேடயம், ரூ. 7.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட அளவில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின்கீழ் சிறந்த முன்மாதிரி கிராம ஊராட்சியாக பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குள்ளம்பாளையம் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டது.
கடந்த 15-ம் தேதி ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில், கேடயம் மற்றும் விருதுக்கான தொகை ரூ.7.50 லட்சம் காசோலையை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி அவர்கள் குள்ளம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் அர்ஜூனிடம் வழங்கினார். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட இயக்குனருமான மதுபாலன் ஆகியோர் உடனிருந்தனர். குள்ளம்பாளையம் சிறந்த ஊராட்சியாக தேர்வு பெற்றமைக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.