கோபிச்செட்டிபாளையம் லக்கம்பட்டி பேரூராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டி வழங்கும் விழா முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் 77 மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம் பி சத்தியபாமா, கரட்டடிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் குறிஞ்சி நாதன், லக்கம்பட்டி பேரூராட்சி தலைவர் அன்னக்கொடி ரவிச்சந்திரன், அதிமுக மாணவர் அணி செயலாளர் அருள் ராமச்சந்திரா, முன்னாள் லக்கம்பட்டி பேரூராட்சி தலைவர் வேலுமணி மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் -
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்குவதை கடந்த 2004 ல் தொடங்கி தற்போது வரை சுமார் 59 லட்சத்து 47 ஆயிரம் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது,
அவிநாசி கைகாட்டி புதூரில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்குள் புகுந்த திமுக கவுன்சிலரின் கணவர் பள்ளித் தலைமையாசிரியரை தாக்குவது வேதனை அளிக்கிறது, நாம் பெற்றோர்களை நேசிப்பது போல ஆசிரியர்களையும் நேசிக்க வேண்டும், அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் ரூ.3 கோடி கல்வி உதவித்தொகையுடன் 4 வருட அறிவியல் ஆராய்ச்சி படிப்புக்கு சென்னிமலையை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி சுவேகா தேர்வாகியுள்ளது கல்வியால் மட்டும் தான் முடியுமே தவிற வேறு யாராலும் முடியாது என மாணவர்களிடையே சிறப்புறையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் -
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் தான் முதலமைச்சராக வர முடியும் என்ற பொருளில் பேசியதாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் என்னை பொறுத்த வரை தெளிவாக அண்ணா பிறந்தநாள் பொதுகூட்டத்தில் பேசிய வார்த்தைகள் வேறு. அது சித்தரிக்கப்பட்டது வேறு. ஒரு சமுதாயத்தை சார்ந்து இருக்கிற ஒருவர் தற்காலிக பொதுச்செயலாளராக இருக்கும் போது உங்களுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று சிலர் கேட்கின்றனர். அதற்க்கு இந்த இயக்கத்தில், சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு இந்த இயக்கம் நடைபெற்று வருகிறது.அனைத்து இனத்தை சார்ந்தவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதால் தான் வாய்ப்பு எனக்கு அளிக்கவில்லை என்று கூறினேன். ஆனால் அங்கு சொல்லாத கருத்துகளை சொன்னதாக செய்திகள் வந்தது என அவர் கூறியுள்ளார்.