நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா இனிதே நடைபெற்றது. இவ்விழாவினை மாணவர்களின் தனித்திறன்களை ஊக்கப்படுத்தும் பேச்சாளர் திருமதி கவிதா ஜவஹர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இவர்களுடன் ஈரோடு நவரசம் கலை, அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியர் ஐ. செல்வம் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்துக் கொண்டார்.
ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு.வி.சண்முகன் அவர்கள் தலைமையேற்று உரையாற்றுகையில், பொறியியல் துறையில் தான் ஏராளமான வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளதாகவும், உலகின் அனைத்து இடங்களிலும் குண்டூசி முதல் ஏவுகணை வரை பொறியாளனின் பங்கு மிகவும் மாகத்தானது என்பது முக்கிய காரணங்களாக கூறினார்.
நந்தா என்றாலே வேலைவாய்ப்பு என்ற கருத்தை மக்கள் மனதில் பதிய வைக்கும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பில் புதிய மைல் கற்களை எங்கள் கல்லூரி எட்டி வருகிறது என்றார். மேலும், இந்த ஊக்கத்தின் காரணமாக எங்களது கல்வி நிறுவனங்களின் மற்றொரு அங்கமாக பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை தனது பணியினை இக்கல்வியாண்டு முதல் தொடங்குகிறது என்றும், அடுத்து வரும் கல்வியாண்டில் பொது மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தொடங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.
இவ்விழாவில் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் திரு.எஸ்.நந்தகுமார் பிரதீப் மற்றும் நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திரு.எஸ்.திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி முனைவர் திரு.எஸ்.ஆறுமுகம் மற்றும் நந்தா தொழில் நுட்ப வளாகத்தின் இயக்குனர் செந்தில் ஜெயவேல் ஆகியோர் கலந்து கொண்டு முதலாமாண்டு மாணவர்களை வரவேற்று வாழ்த்திப் பேசினர். முன்னதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் திரு.ச. நந்தகோபால் முதலாம் ஆண்டு பயில இருக்கும் மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் வரவேற்று பேசினார்.
பின்னர் கௌரவ விருந்தினரான பேராசிரியர் ஐ. செல்வம் பேசுகையில், தனது கல்லூரி படிப்பு துவங்கிய முதலாமாண்டு முதல், பயின்று வெளியேறும் வரை பெற்ற அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டு உற்சாகப்படுத்தினார். மேலும் கல்லூரி பருவத்தில் நட்பின் முக்கியத்துவத்தினையும், நண்பர்களுக்குள் நல்லதொரு அன்யோனத்தினை கடைப்பிடித்து துணை புரிந்து வந்தால் வாழ்வில் சிறந்த நிலையினை அடையலாம் என்றும் கூறினார்.
இதனை தொடர்ந்து, பேச்சாளர் திருமதி கவிதா ஜவஹர் அவர்கள் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், கடந்த இருபது ஆண்டுகளில் உலக அளவில் நமது இந்தியா, ஐ.நா சபை உட்பட இராணுவம், இரயில்வே போன்ற துறைகளில் முதல் பத்து இடங்களுக்குள் தக்க வைத்துக் கொண்டு முன்னேறி வருவதாக கூறினார். இதற்கு பொறியியல் மற்றும் தொழில் நுடபம் பயின்று வெளியேறிய தங்களை போன்ற மாணவர்களே காரணமாவார்கள் என்று கூறினார். ஆதலால், நீங்கள் சரியான சிறந்த பாடப்பிரிவினையே தேர்வு செய்துள்ளீர்கள் என்று மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
அப்பொறியாளர்களைப் போல நீங்களும் பொறியியல் மற்றும் தொழில் நுட்பத்தினை நன்கு பயின்று, கற்றறிந்து நமது நாட்டினை உலகளவில் முதல் ஐந்து இடங்களுக்குள் கொண்டு வந்திட எனது வாழ்த்துக்கள் என்று மாணவர்களை உற்சாப்படுத்தினார்.
விழாவின் முடிவில், அறிவியல் மற்றும் மானுடத் துறையின் தலைவர் திரு அத்திக்குமரன் நன்றியரை கூறினார்.