கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் உருவ சிலைக்கு மாலை அணிவிக்க வருகை தந்த தொல்.திருமவளவனை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஜி வெங்கடாசலம், டி என் பாளையம் ஒன்றிய செயலாளர் எம். சிவபாலன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அதைத்தொடர்ந்து கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சமூக நீதிக்காக தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட தலைவர்களுள் முதன்மையானவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். சமூக நீதி காவலர் வி.பி.சிங்கின் நினைவு நாளான இந்த நாளில் தமிழகத்தின் சமூக நீதிக் காவலர் கலைஞரின் திருவுருவச்சலைக்கு மாலை அணிவித்தது மிக பொருத்தமாக அமைந்துள்ளது.அவருக்கு எமது வீரவணக்கத்தை செலுத்துகிறோம்.நவம்பர் 27 மாவீரர்கள் நாளாக ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் உலகம் தழுவியளவில் கொண்டாடி வருகிறது.
அந்த வகையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் மாவீரருக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்.
ஈழத்தில் இன்னும் மக்கள் சொல்ல முடியாது அளவிற்கு துயரங்களுக்கு ஆளாகி அல்லல்ட்டு வருகின்றனர்.இலங்கையில் காணாமல் போனவர்களின் நிலை என்ன என்பது இன்னும் அறிந்து கொள்ள முடியவில்லை. அதற்கான போராட்டங்கள் வருடக் கணக்கில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஐநா பேரவையும் சர்வதேச சமூகமும் ஈழத் தமிழர்கள் துயர் துடைக்க முன்வர வேண்டும். காணாமல் போனவர்களை கண்டறிவதற்கும் அவர்களை இழந்து வாடுகின்ற குடும்பத்தினருக்கு உரிய இழப்பை பாதுகாப்பையும் வழங்குவதற்கு ஐநா பேரவை உள்ளிட்ட சர்வதேச சங்கம் முன் வர வேண்டும் என்று இந்த மாவீரர் நாளில் வலியுறுத்துகிறேன்.
இலங்கை அதிபர் மகேந்திர ராஜபக்சே உள்ளிட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை குற்றவாளிகள் அனைவரையும் சர்வதேச புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்தி உரிய தண்டனை அளிப்பதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
தமிழகத்தில் பாஜ வளர்கிறது அல்லது வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதெல்லாம் திட்டமிட்டு பரப்பக்கூடிய ஒரு செயல் திட்டமாக இருக்கிறது. அவர்கள் அதிமுகவை பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாவது இடத்தை பிடிக்க வேண்டும் என்ற பகிரங்க முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள். சமூக ஊடகங்களை பயன்படுத்தி ஊடக அரசியலை அவர்கள் உயர்த்தி பிடிக்கிறார்கள். அதாவது பாஜ இங்கு வலுவாக உள்ளது போன்ற தோற்றத்தை காட்டுகிறார்கள்.இது வெறும் தோற்றம்தான். தமிழ்நாடு என்பது சமூக நீதிக்கான மாநிலம். சனாதனத்திற்கு இடமில்லை. பாஜவினர் அப்பாவி இந்துக்களை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்துகிறார்கள்.
திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் பாஜ உள்ளிட்ட சங்பரிவாரின் சனாதான அரசியலை அம்பலப்படுத்துவோம். திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் இந்து சமயத்துக்கு எதிரானவர்கள் என்ற தோற்றத்தை உருவாக்க பார்க்கிறார்கள். திமுக அரசு ஊழல் செய்கிறது என்றெல்லாம் அவதூறு பரப்புகிறார்கள்.இதை எல்லாம் அவர்கள் தமிழக அரசியலில் இரண்டாவது இடத்தை பிடிப்பதற்கான அரசியல் யுக்திகள். இந்த யுக்தி இங்கு எடுபடாது.
திமுக தலைமையிலான கூட்டணி தான் இங்கு கூட்டணியாக இருக்கிறது. அதிமுக தலைமையில் கூட்டணி இல்லை.அது கடந்த தேர்தலுடன் கலைந்து விட்டது.சிதறிவிட்டது. இனி அவர்கள் அந்த கூட்டணியை உருவாக்குவதற்கு அரும்பாடு பெரும்பாடு பட வேண்டும்.ஆனால் இங்கே கடந்த நாடாளுமன்ற தேர்தல் சட்டமன்றத் தேர்தலை தொடர்ந்து வலுவோடு இருக்கிற ஒர் அணி தான் திமுக தலைமையிலான கூட்டணி.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இந்த அணி மிகப்பெரிய வெற்றி பெறும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஏதேச்சதிகார போக்கு. இது ஏற்புடையது இல்லை. அது அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரானது. மதமாற்ற தடை சட்டம் மத்திய அரசு கொண்டு வந்துள்ளதும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான ஒரு சதித்திட்டம் ஆகும்.
அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் தான் விரும்புகிற மதத்தில் இருப்பதற்கு அல்லது தான் விரும்புகிற மதத்தை தழுவுவதற்கு சுதந்திரமும் உரிமையும் அளிக்கிறது.அதை பறிக்கக் கூடிய வகையில் ஆர்எஸ்எஸ் செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்த இப்படிப்பட்ட சட்டங்களை கொண்டு வர முயற்சிக்கிறார்கள். மக்கள் அதை முறியடிப்பார்கள்.
தமிழ்நாடு மின்வாரியம் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது பொதுமக்கள் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். டிசம்பர் 5ஆம் தேதி பிரதமர் தலைமையில் நடைபெற உள்ள ஜி 20 சர்வதேச நாடுகள் கூட்டத்தை தொடர்ந்து பிரதமர் தலைமையில் நடைபெற உள்ள கருத்து பகிர்வு கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் சிறுத்தை வள்ளுவன், அம்பேத்கார், மாவட்ட பொருளாளர் மிசா.தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.