ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடக்கிறது. இத்தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், அதிமுக சார்பில் ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் கட்சித் தேர்தல் அலுவலகத்தை, முன்னாள் அமைச்சர் மற்றும் இடைத்தேர்தல் குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் திறந்து வைத்து, அதில்
முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என முன்னாள் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளதை வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் கே.பி.முனுசாமி, எஸ் பி வேலுமணி, கே சி கருப்பண்ணன், தங்கமணி, பொன்னையன், தமிழ்மகன் உசேன், த.மா.கா., முன்னாள் எம்.எல்.ஏ., விடியல் சேகர், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் பல முன்னால் அமைச்சர்கள் எம் எல் ஏ க்கள் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.எஸ். தென்னரசு (65), 1988-ம் ஆண்டு முதல் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். 1988-ம் ஆண்டு ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளர், 1992-ம் ஆண்டு ஈரோடு நகர இணை செயலாளர், 1995-ம் ஆண்டு நகர செயலாளர், 1999-ம் ஆண்டு கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர், 2000-ம் ஆண்டு மீண்டும் ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளர், 2010-ம் ஆண்டு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர், 2011-ம் ஆண்டு முதல் ஈரோடு கிழக்கு தொகுதி செயலாளர் பொறுப்பினை வகித்துள்ளார்.
கடந்த 2001-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், ஈரோடு தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பணியாற்றினார்.
தற்போது தேர்தல் பணி, வேட்பாளர் தேர்வு தொடர்பாக நான்கு முறை நிர்வாகிகளிடம் தீவர ஆலோசனை மேற்கொண்ட பழனிசாமி, கே.எஸ். தென்னரசிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி, வேட்பாளராக அறிவித்துள்ளார்.
அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.எஸ்.தென்னரசு, அதிமுக நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று 8 முறை சிறை சென்றுள்ளார். ஸ்கிரீன் பிரிண்டிங் பட்டறை நடத்தி வரும் கே.எஸ். தென்னரசு, கடந்த 25 ஆண்டுகளாக ஈரோடு மாவட்ட சுமைதூக்குவோர் மத்திய சங்க பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார்.
ஈரோடு கருங்கல்பாளையம் சொக்காய்தோட்டம் பகுதியை சேர்ந்த இவர், மனைவி டி.பத்மினி, மகன் டி.கலையரசன், மருமகள் வி.சுகாசினி, மகள் டி.கலைவாணி, மருமகன் எஸ்.பரணிதரன் ஆகியோருடன் வசித்து வருகிறார்.