Type Here to Get Search Results !

கோபியில் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக குப்பை தொட்டிகள் வழங்கல்...

 கோபிசெட்டிபாளையம் நகராட்சி 13வது வார்டு பகுதியில் குடியிருக்கும் அனைவருக்கும் எனது குப்பை எனது பொறுப்பு என்ற பொருளில் ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு குப்பை தொட்டிகள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் 13வது வார்டு பகுதியில் 21 கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடு தொடங்கி வைக்கப்பட்டது. 
நகர் மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 13 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ரேவதி,  அவரது கணவர் தம்பா என்கிற சண்முகசுந்தரம் ஆகியோர் தனது சொந்த முயற்சியில், தனது வார்டில் குடியிருக்கும் அனைத்து குடியிருப்புகளுக்கும் 2 குப்பை தொட்டிகளை வழங்கினர். அதே நேரத்தில் தனது வார்டில் குடியிருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க 21 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி,  அதற்கான கட்டுப்பாட்டு மையத்தையும்  நகர் மன்ற தலைவர் என்.ஆர். நாகராஜ் தொடங்கி வைத்தார். 
13 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏற்கனவே,  பேட்டரியால் இயங்கும் வாகனத்தை தனது வார்டில் குப்பை சேகரிக்கும் பணிக்காக நகராட்சிக்கு வழங்கியுள்ளார். மக்கள் குப்பைகளை பிரித்துக் கொடுப்பதற்காக இரண்டு குப்பை தொட்டிகளையும் வழங்கி உள்ளார். இதில் பொதுமக்கள் மக்கும் குப்பைகளை தனியாகவும்,  மக்காத குப்பைகளை தனியாகவும் பிரித்து வழங்க வீடு தோறும் தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினருடன் சேர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 
நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சௌந்தரராஜன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் விஜயன், பூங்கொடி, செல்வகுமார், விசுவநாதன், பழனிச்சாமி, சக்திவேல் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள் பூங்கொடி, வைஷ்ணவி, மஞ்சுநாதன் அருள் பிரசாத், சத்யா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.