ஈரோடு பி.என்.ஐ.(BNI) அமைப்பின் சி.எஸ்.ஆர். என்னும் அங்கத்தினால் “ஜாய் ஆப் கிவ்விங்” என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இதன் செயல்பாடுகள் குறித்த விளக்க கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இந்த கூட்டத்தில் பி.என்.ஐ. ஈரோடு மண்டல நிறுவனத்தின் செயல் இயக்குனர்கள் ராஜசேகர், பெரியசாமி, மகேஷ் பி.வி.கிரி ஆகியோர் கலந்துகொண்டு பேசியபோது கூறியதாவது:-
தன்னார்வலர்களை கொண்டு ஒரு அமைப்பை உருவாக்கும் முயற்சியாக “ஜாய் ஆப் கிவ்விங்” தொண்டு நிறுவனம் தொடங்கப்பட்டது. முதியோர் இல்லம், குழந்தைகள் பாதுகாப்பு இல்லம், கல்விப்பணி, மருத்துவ சேவை, பெண்கள் நல அமைப்பு, சமூக நல பாதுகாப்பு, மரங்களை பேணிக்காக்கும் அமைப்புகள், மக்களிடையே ஏழ்மையை போக்கும் வழி செய்யும் அமைப்புகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யும் நிறுவனங்கள் போன்ற பலதரப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஒன்றிணைத்து மாபெரும் கண்காட்சியை நடத்த திட்டமிட்டு உள்ளோம். அதன்படி வருகிற மே மாதம் 20-ந் தேதி மற்றும் 21-ந் தேதியில் ஈரோடு கங்காபுரத்தில் உள்ள டெக்ஸ்வேலியில் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. இது முற்றிலும் சமுதாய அக்கறை கொண்டு நடத்தப்பெறும் ஒரு கண்காட்சி ஆகும்.
தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்ய விருப்பப்படும் பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் எங்களிடம் பொருட்களை கொடுக்கலாம். அதனை தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து உதவுவோம். தொண்டு நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் அமைத்து தாங்கள் செய்யும் சேவைகளை வெளிப்படுத்தி, தங்களை அடையாளப்படுத்தி கொள்ள இந்த கண்காட்சி பெரிதும் உதவும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். இதில் கண்காட்சிக்கான நோட்டீசு வெளியிடப்பட்டது.
இந்த கூட்டத்தில் டெக்ஸ்வேலி செயல் இயக்குனர் டி.பி.குமார், பி.என்.ஐ. அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உமாசங்கர், கே.கே.பி. நிறுவனத்தின் இயக்குனர் அருண் பாலுசாமி, சிறகுகள் அமைப்பின் விமல் கருப்பண்ணன், ஆகாரம் இளங்கோவன், கே.எஸ்.சி. பள்ளிக்கூட தாளாளர் செந்தூரன், கட்டிட பொறியாளர் அறிவுடைநம்பி, எஸ்.ஆர். குழுமத்தை சேர்ந்த மகாலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.