Type Here to Get Search Results !

ஆட்சியர் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி)

ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (25.05.2023) வருவாய் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜ கோபால் சுன்கரா இஆப., அவர்கள் தலைமையில் ஈரோடு வட்டத்திற்குட்பட்ட ஈரோடு மேற்கு உள்வட்டத்திற்கான கிராமங்களுக்கான 1432-ம் பசலி ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வருவாய் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,

ஈரோடு மாவட்டத்தில் 1432-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம், ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வட்டங்களிலும் 25.05.2023 முதல் தொடங்கப்பட்டு 31.05.2023 வரை நடைபெறுகிறது. அதன்படி, கொடுமுடி, மொடக்குறிச்சி, பவானி, ஈரோடு மற்றும் நம்பியூர் ஆகிய வட்டங்களில் 25.05.2023 முதல் 29.05.2023 வரையிலும், தாளவாடி வட்டத்தில் 25.05.2023 அன்றும், அந்தியூர் வட்டத்தில் 25.05.2023 முதல் 30.05.2023 வரையிலும், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் மற்றும் பெருந்துறை ஆகிய வட்டங்களில் 25.05.2023 முதல் 31.05.2023 வரையிலும், (சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் நீங்கலாக) அந்தந்த வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறுகிறது. பொது மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அந்தந்த வருவாய் தீர்வாய அலுவலர்களிடம் சமர்ப்பித்து பயன் பெறலாம் என தெரிவித்தார்.
முன்னதாக, ஈரோடு மேற்கு உள் வட்டத்திற்குட்பட்ட தயிர்பாளையம், பேரோடு, நசியனூர், வில்லரசம்பட்டி, கதிரம்பட்டி, தோட்டாணி, புத்தூர்புதுப்பாளையம், வேப்பம்பாளையம், கங்காபுரம் மற்றும் ஆட்டையாம்பாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டு, அனைத்து மனுக்களையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளமாறு, அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 
தொடர்ந்து, ஜமாபந்தி தீர்வாயத்தில் ஈரோடு மேற்கு உள்வட்டத்திற்குட்பட்ட 10 கிராமங்களுக்கான வருவாய் பதிவேடுகள், பட்டா சிட்டா பதிவேடு, வரிவசூல் பதிவேடு, நில அளவை பதிவேடு, வருவாய் வரைபட பதிவேடு, ஏ-பதிவேடு, சிறப்பு பதிவேடு, நத்தம் அடங்கல் பதிவேடு, கிராம கணக்குகள் மற்றும் நில அளவை சங்கிலி ஆகியவற்றையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜ கோபால் சுன்கரா இஆப., அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.72,000/- மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி உதவித்தொகையினையும், 3 பயனாளிகளுக்கு ரூ.36,000/- ஆதரவற்ற விதவை உதவித்தொகையினையும், 15 பயனாளிகளுக்கு ரூ.1,80,000/- மதிப்பீட்டில் இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகையினையும், 6 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாறுதல் ஆணையினையும், 25 நபர்களுக்கு நகல் குடும்ப அட்டைகள் என மொத்தம் 53 பயனாளிகளுக்கு ரூ.2,88,000/- மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, வருவாய் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பொதுமக்களிடமிருந்து 50-ற்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அதில், பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடி நடவடிக்கையாக 4 நபர்களுக்கு பட்டா மாறுதல் ஆணையினையும் வழங்கினார். மேலும், இன்று (25.05.2023) வருவாய் தீர்வாயத்தின் முதல் நாள் பெறப்பட்ட மனுக்களின் மீது மூன்று நாட்களில் (29.05.2023) வரும் திங்கட்கிழமைக்குள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 
இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி.என்.பொன்மணி இஆப., அலுவலக மேலாளர் (குற்றவியல்) திரு.விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.பாலசுப்பரமணியம், வட்டாட்சியர்கள் திரு.ஜெயகுமார் (ஈரோடு வருவாய்), திருமதி.பரிமளாதேவி (சமூக பாதுகாப்பு), திரு.குமரேசன் (கலால்), உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.