தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் 17 பேர் பலியாகினர். எனவே தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்க வேண்டும் என்று கூறி பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானாவில் த.மா.கா.வினர் கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனையை கண்டித்தும், சர்வதேச விளையாட்டு மைதானங்களில் மது விற்பனைக்கு அனுமதி அளித்த தமிழக அரசை கண்டித்தும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்கு த.மா.கா. மாநில இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா தலைமை தாங்கி, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார். மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், இளைஞர் அணி மத்திய மாவட்ட தலைவர் ரமேஷ், பொதுச்செயலாளர் மாயா உள்பட பலர் கலந்துகொண்டனர்.