ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், பர்கூர் மலை கிராமப்பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை 24.05.2023 அன்று அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா இஆப., அவர்கள் செய்தியாளர் பயணத்தின் போது நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, 24.05.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், பர்கூர் ஊராட்சிக்குட்பட்ட சோளகனை பகுதியில் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தலா ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 தொகுப்பு வீடுகளையும், பாரத பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், தலா ரூ.2.69 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 38 தொகுப்பு வீடுகளையும், ஈரோடு வனக்கோட்டம், பர்கூர் வனச்சரகம் பழங்குடி மலை வாழ் கிராம உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆள்துளை கிணறு மற்றும் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளதையும், அதே பகுதியில் செயல்படும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளியினையும், மேலும், ஒட்டனூர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.8.23 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளதையும், ஊசிமலை பகுதியில் செயல்படும் துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சாலை வசதி அமைக்கப்படவுள்ள இடத்தினையும் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளிக்கு செல்வதற்கான சாலையில் கான்கிரீட் தளம் அமையவுள்ள இடத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மேற்கொண்டு குழுந்தை பெற்று வீடு திரும்பியவரிடம் தொலைபேசியில் நலம் விசாரித்து, மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.