Type Here to Get Search Results !

பள்ளி சிறார் நலத்திட்டம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு இருதய நோய் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.

கோபிசெட்டிபாளையம் தனியார் கல்லூரியில் நடைபெற்ற பள்ளி சிறார் நலத்திட்டம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு இருதய நோய் கண்டறிதல் முகாமில் ஈரோடு மாவட்டம் முழுவதும் இருந்து 194 குழந்தைகளுக்கு சிறப்பு பரிசோதனை நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நடமாடும் மருத்துவ குழுவினர் குடற்புழு நீக்கம், இருதய நோய் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு நோய்களை கண்டறிவதற்கும், உரிய சிகிச்சை அளிக்கப்பட்டும் வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார சுகாதார மையங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இருதய நோய் அறிகுறிகள் உள்ள 194 பேருக்கு இறுதி கட்டமாக இருதய நோய் கண்டறியும் சிறப்பு முகாம் கோபியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த முகாமை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண்ணுண்ணி தொடங்கி வைத்தார். முகாமில் 194 பேருக்கும் இ.சி.ஜி., எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு நோயின் தன்மை கண்டறியப்பட்டது. பரிசோதனைக்கு பிறகு மருத்துவ சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை குறித்து முடிவு செய்ய செய்யப்பட்டு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாணவ, மாணவிகளிடமும் மருத்துவ பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம், சிகிச்சைக்கு பிறகு ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும், வழங்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து மருத்துவ பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம் கூறும் போது,
ஈரோடு மாவட்டத்தில் குழந்தைகளுக்கான இருதய நோய் கண்டறிதல் முகாமில் 194 குழந்தைகளுக்கு இன்று பரிசோதனை செய்யப்பட்டது. 2015 முதல் 2023ம் ஆண்டு வரை ஈரோடு மாவட்டத்தில் 1226 குழந்தைகளுக்கு இருதய நோய் கண்டறியப்பட்டு அதில் 374 பேருக்கு அறுவை சிகிச்சை 852 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 1226 பேருமே நலமுடன் உள்ளனர். இந்த முகாமில் 194 பேருக்கு இருதய நோயின் தன்மை குறித்து கண்டதற்காக சென்னையிலிருந்து சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் சிறப்பு பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதில் அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலமாக இலவசமாக அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். ஒவ்வொரு குழந்தைகளின் பெற்றோர்களும் பச்சிளம் குழந்தைகள் பிறக்கும் பொழுதே இருதய நோய் குறித்த அறிகுறியை தெரிந்து கொள்வது அவசியமாகும்.பச்சிளங் குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடித்தல், மூச்சுத்திணறல், எடை அதிகரிக்காமல் இருத்தல், குழந்தைகள் பால் குடிக்கும் பொழுது நெற்றியில் வியர்வை ஏற்படுதல் இருதய நோய்க்கான தொடக்கமாகவே கருதப்படும். அதேபோன்று குழந்தைகளின் உதடு நீல நிறத்தில் மாறினாலும், எடை அதிகரிக்காமல் இருந்தாலும் இருதய நோய் அறிகுறியாக உள்ளது. இது போன்ற அறிகுறிகள் இருந்தால் பொற்றோர்கள் உடனடியாக குழந்தைகள் மருத்துவர்களிடம் மட்டுமின்றி சிறப்பு இருதய நோய் சிகிச்சை மருத்துவர் இடமும் ஆலோசனை பெற வேண்டும்.பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு மருத்துவ குழு மூலம் ஒவ்வொரு வட்டாரத்திலும் இரண்டு மருத்துவர்கள் மூலம் இரண்டு குழுக்கள் உள்ளது. அந்த சிறப்பு மருத்துவ குழுவினர் மாவட்டம் முழுவதும் இருந்த பள்ளி மாணவ மாணவிகள் ,அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளிடமும் ஒரு வருடமாக தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அறிகுறிகள் உள்ள 194 பேர் தற்போது இறுதி கட்ட பரிசோதனை நடைபெற்று வருவதாகவும், பரிசோதனைக்கு பிறகு மருத்துவ சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை குறித்து முடிவு செய்ய செய்யப்பட்டு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.