கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் இவைகளை பேணிக்காக்கும் ஒரு அரசு நிறுவனமாக தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக்கழகம் விளங்கி வருகிறது. கைவினைக் கலைகளுக்கு உயிர் கொடுத்து காப்பதற்கு பல முயற்சிகளை செம்மையாக பூம்புகார் நிறுவனம் செய்து வருகிறது. மேலும் கைவினைஞர்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் பலவகைக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.
இதன் ஒரு கட்டமாக ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் கோடைத் திருவிழா கண்காட்சி மற்றும் விற்பனை 12.05.2023 முதல் 31.05.2023 முடிய நடைபெறுகிறது.
இக்கண்காட்சியில் தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் கலையழகு மிக்க பித்தளை, பஞ்சலோகம், மரம், மற்றும் கற்களால் ஆன சிற்பங்கள், பித்தளை விளக்குகள், மொராதாபாத் கலைப்பொருட்கள், ஜெய்பூர் வண்ண ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியம் மற்றும் தட்டுகள், ஆயில் பெய்ண்டிங், வலம்புரி சங்கு, அகர்பத்திகள், வாசனை திரவியங்கள், ரோஸ் மரத்தில் பதிக்கப்பட்ட சுவர் அலங்கார பேனல்கள், சகரன்பூர் மரத்தில் செய்யப்பட்ட மசாஜ் பொருட்கள், அலாய் மெட்டல், வெள்ளை உலோகத்தால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள், காகிதக்கூழினால் செய்யப்பட்ட பொம்மைகள், மாக்கல் விநாயகர், சந்தனக்கட்டைகள், சென்னப்பட்டனா பொம்மைகள், மற்றும் மண்கலை அலங்காரப் பொருட்கள் நவரத்தினக் கற்கள், விலை உயர்ந்த ராசி கற்கள், ஒளி வீசும் இதர கற்கள் பதித்த ஐம்பொன் நகைகள், முத்து நகைகள் ருத்திராட்சமாலை, ஸ்படிக மாலை, மற்றும் எண்ணற்ற பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
குறைந்தபட்சமாக ரூ.50 முதல் ரூ.1 இலட்சம் வரையில் கைவினை பொருட்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. கடன் அட்டைகளுக்கு எவ்வித சேவைக் கட்டணமும் இன்றி ஏற்றுக்கொள்ளப்படும். குறிப்பிட்டப் பொருட்களுக்கு 10% சிறப்புத் தள்ளுபடி உண்டு.
இக்கண்காட்சியில் காட்சிக்கும் விற்பனைக்கும் உள்ள பொருட்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்து தருவிக்கப்பட்டுள்ளன. இதில் அழகிய கலைப்பொருட்களை மக்கள் வாங்கி தங்கள் இல்லத்திற்கு அழகூட்டி மகிழ்விக்கவும் மற்றும் இச்சிற்பங்களை உற்பத்தி செய்யும் கைவினைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் உதவுவதாக பூம்புகார் நிறுவனத்தின் மேலாளர் ஜி.சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.