பொய் வழக்கு பதிவு செய்ததோடு வழக்கு விசாரணை என்ற பெயரில் தன்னை அடித்து துன்புறுத்திய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற்றுக்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் டாக்டர். சரவணன் கருப்பசாமி என்கிற டாக்டர். எஸ் கே சாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், "அகில உலக மனித உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் உலக மனித உரிமைகள் ஆணையம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட இயக்கத்தை நான் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். கடந்த 2008-ம் ஆண்டு சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக போலீஸாருக்கு எதிராக பல புகார்களை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முதல் உச்ச நீதிமன்றம் வரை அளித்தேன்.
இதனால், சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் அருண் ஐபிஎஸ், துணை காவல் கண்காணிப்பாளர் சாம்பசிவம், ஆய்வாளர் செட்ரிக் மேனுவல் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் என் மீது பொய் வழக்குப் பதிவு செய்து, அடித்து துன்புறுத்தினர். எனவே, என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கையும், என்னிடம் இருந்து அபகரித்துக்கொண்ட பல லட்சம் மதிப்பிலான பொருட்களையும் பற்றி விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். என்னை துன்புறுத்திய காவல் துறை அதிகாரிகள் மீது சட்டப்படி தகுந்த கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: "மனுதாரர் தன்னை துன்புறுத்திய காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக கொடுத்த புகாரை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், மனுதாரருக்கு இழப்பீடு வழங்கவும், காவல்துறை அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்கி கடந்தாண்டு நவம்பர் 17ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், மனுதாரருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கின் குற்றப் பத்திரிகையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்துள்ளனர் என்று கூறப்பட்டது. மேலும், காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும் மனுதாரர் மனு தாக்கல் செய்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் தான் ஒரு அப்பாவி என்பதை நிரூபித்துள்ளதாகவும் கூறி உச்சநீதிமன்ற உத்தரவையும் நீதிமன்றத்தில் மனுதாரர் தாக்கல் செய்துள்ளார். எனவே, பொய் வழக்குப்பதிவு செய்து துன்புறுத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடி மனுதாரர் உரிய நிவாரணம் பெறலாம்" என்று உத்தரவிட்டுள்ளார்.