கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் சேகரம் செய்யப்படும் திடக்கழிவுகளை பொதுமக்களே மக்கும் குப்பை, மக்காத குப்பை மற்றும் அபாயகரமான கழிவுகள் என தரம் பிரித்து ஒப்படைக்க வலியுறுத்தப்படுகிறது. அதன்படி
சேகரம் செய்யப்படும் மக்கும் குப்பைகளை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மக்காத மறுசுழற்சிக்கு உதவும் பொருட்களை தூய்மை பணியாளர்களே விற்பனை செய்து அதற்கான பணப்பயன் அடைகின்றனர். மறுசுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக்குகளை பண்டல்களாக செய்து சிமெண்ட் ஆலைக்கு எரிபொருளுக்காக அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில் இ வேஸ்ட் எனப்படும் பழுதடைந்த பல்ப்கள், டியூப் லைட்கள், பேட்டரிகள், கம்ப்யூட்டர் மற்றும் தொலைக்காட்சி பிக்சர் டியூப்கள் போன்ற கழிவுகளை வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதிகளில் சேகரம் செய்யும் பணிகளை நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிவக்குமார் அவர்கள் உத்தரவின்படி, நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சௌந்தரராஜன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள் இப்பணிகளை கண்காணித்து வருகின்றனர். சேகரம் செய்யப்படும் மின் கழிவுகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற மின்னனு கழிவுகளை முறைப்படி அப்புறப்படுத்தும் மறுசுழற்சியாளரிம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.