கோபிச்செட்டிபாளையம் ஒத்தக்குதிரையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக கோபிச்செட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் கல்லூரியின் தன்னார்வலர்கள் நூறு நபர்கள் இணைந்து பொதுமக்களிடையே போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர். ஆ. மோகனசுந்தரம் அவர்கள் தலைமை வகித்தார். நிகழ்வில் கோபிச்செட்டிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சண்முகவேல் மற்றும் துணை ஆய்வாளர் திரு. ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். காவல்துறை துணை ஆய்வாளர் திரு. ஆறுமுகம் அவர்கள் பொதுமக்களிடையே போதைப் பொருளால் ஏற்படக்கூடிய தீங்குகளைப் பற்றி பேசினார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்விற்கு கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் திரு. கிருஷ்ணகுமார் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் தன்னார்வ மாணவர்கள் தாங்கள் தயார் செய்த பதாகைகளை கைகளில் ஏந்தியும், பேருந்து நிலைய சுற்றுப்புறத்தில் ஊர்வலமாகச் சென்றும் பொது மக்களிடம் விழிப்புணர்வு வாசகங்களை விளக்கினர்.
“போதையில் நீ வீதியில் உன் குடும்பம்”
“ஒழிப்போம் ஒழிப்போம் போதையை ஒழிப்போம்”
“வெறுப்போம் வெறுப்போம் மதுவினை வெறுப்போம்”
“பிடிக்காதே பிடிக்காதே புகை பிடிக்காதே”
என்ற முழக்கங்களை ஓங்கி ஒலித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்விற்கான ஏற்பாட்டை கல்லூரி உதவி பேராசிரியர்கள் திரு. அஜித்குமார் மற்றும் காயத்ரி ஆகியோர் செய்திருந்தனர்.