ஈரோடு மாவட்டம், ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் ரூ.86.08 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செய்தியாளர் பயணத்தின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜ கோபால் சுன்கரா இஆப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 225 கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேரோடு ஊராட்சி பகுதியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளி உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ், ரூ.3.75 இலட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் புதுப்பிக்கும் பணியினையும், ரூ.3.78 இலட்சம் மதிப்பீட்டில் 1 வகுப்பறையினை புதுப்பிக்கும் பணியினையும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதி திட்டத்தின் கீழ், ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலை முதல் குமரன் நகர் கடைசி வரை உள்ள சாலையை மெட்டல் போட்டு தார் சாலையாக அமைக்கப்பட்டு வருவதையும், கரட்டுப்பாளையம் பகுதியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.20.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்டும் பணியினையும், மேட்டுநாசுவம்பாளையம் ஊரட்சி காலிங்கராயன் பாளையம் பகுதியில் 15-வது நிதிக் குழு மாணியத் திட்டத்தின் கீழ், ரூ.16.75 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினையும், லட்சுமி நகர் பகுதியில் மகாத்மா காந்தி தேசயி வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.14.52 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாற்றுப்பண்ணையினையும், தெற்கு தெரு பகுதியில் பாரதப் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ், ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பசுமை வீட்டினையும் மற்றும் மணக்காட்டூர் பகுதியில், ரூ. 16.78 இலட்சம் மதிப்பீட்டில் சுமார் 30000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வரும் பணியினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை நேரில் சென்று பார்வையிட்டு அய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்து, நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள கோப்புகள் குறித்து கேட்டறிந்து அதற்கு உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து கணினி அறை மற்றும் பதிவறை ஆகியவற்றை பார்வையிட்டு, அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, உதவி ஆட்சியர்கள் (பயிற்சி) திருமதி.என்.பொன்மணி இஆப., திரு.வினய்குமார் மீனா இஆப., ஈரோடு வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.சரஸ்வதி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.