கோபி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியின் நுகர்வோர் மன்றம் (consumer club) சார்பாக நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் சமூக பாதுகாப்பு என்ற தலைப்பிலான கருத்தரங்கம் 19.08.23 (சனிக்கிழமை) அன்று கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினரும் முன்னாள் நீதிபதியுமான நீதியரசர் D. ஜெயச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவரது உரையில், "நமக்கான நுகர்வோர் உரிமைகள் என்ன என்று தெரிந்துகொள்வதுதான் நுகர்வோர் விழிப்புணர்வின் தொடக்கப்புள்ளி எனலாம். அந்த உரிமைகளை நாம் அடைய வேண்டும் என்றால் தொடர்ந்து உரிமைகளை வென்றெடுக்க போராட வேண்டும். அதற்கு நல்ல கல்வியறிவும், நமது சமூகம் மீதான மனிதநேய பார்வையும் வேண்டும். அதை நோக்கிய பயணத்தின் மூலம் அனைவருக்கும் அனைத்தும் தரமாக கிடைக்கும் என்ற நிலையை அடையலாம்" என்றார்.
மற்றொரு சிறப்பு விருந்தினரான குளோபல் சமூக நல பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் திரு. கே.கே.சொக்கலிங்கம் சிறப்புரையாற்றினார். அவரது உரையில், " விளம்பரங்கள் நம்மை அளவுக்கு மீறிய நுகர்வோர் ஆக்குகின்றன. இதனால் பலர் கடனாளிகள் ஆகின்றனர். தங்களின் வாழ்க்கையை தொலைக்கின்றனர். தவறான வாக்குறுதி தந்து விற்கப்படும் பொருட்களால் பலர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதை சரி செய்ய நமக்கான நுகர்வோர் உரிமைகளை தேவையான இடங்களில் பயன்படுத்த வேண்டும். அந்த துணிச்சலை மாணவ பருவத்திலேயே நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பின் ஈரோடு மாவட்ட தலைவர் Dr. P.வெங்கடாசலம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
தொடர்ந்து நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்ற கல்லூரியை பாராட்டி கல்லூரிக்கு நினைவுபரிசும், கல்லூரி முதல்வருக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும் கல்லூரியின் மாணாக்கர்களை கொண்டு நுகர்வோர் விழிப்புணர்வு சங்கம் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைவர் திரு. பி.வெங்கடாசலம், கல்லூரியின் முதல்வர் முனைவர் ப. தங்கவேல், டீன் முனைவர் அருண் ராஜா, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக வேதியியல் துறை பேராசிரியர் திரு. ந.சுகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் இறுதியில் இறுதியாண்டு மாணவி வாணிப்பிரியா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேலாண்மைத்துறை தலைவர் முனைவர் சத்தியசுந்தரி ஏற்பாடு செய்திருந்தார்.