கோபிசெட்டிபாளையம் நகராட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக நடைபெற்ற கசடு கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சியில் ஈரோடு மாவட்ட நகராட்சிகளான கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பவானி மற்றும் புஞ்சை புளியம்பட்டி ஆகிய நகராட்சி பகுதியில் பதிவு செய்து இயங்கி வரும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.
திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் இளங்கோவன் அவர்கள் உத்தரவின் படி, கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையாளர் சசிகலா அவர்கள் தலைமையில், நகர்மன்ற உறுப்பினர் ஹக்கீம் அவர்கள் முன்னிலையில் மேற்படி விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.
நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக் சௌந்தரராஜன், உதவி திட்ட அமைப்பாளர் செந்தில்நாதன், சத்தியமங்கலம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பயிற்சியில் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பவானி மற்றும் புஞ்சைப் புளியம்பட்டி நகராட்சி பகுதியினை சேர்ந்த கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வு பயிலரங்க நிகழ்ச்சியில் 144 20 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் செப்டிக் டேங்க் சுத்தம் செய்ய வேண்டிய இடத்தைப் பற்றிய தகவல் அளிப்பார்கள் என்றும் அதனைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட நகராட்சிக்கு தகவல் வழங்கி அவர்கள் மேற்பார்வையில் கழிவு நீர் வாகன உரிமையாளர்கள் செப்டிக் டேங்க் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின் படி செப்டிக் டேங்க் சுத்தம் செய்து அவற்றை அகற்றப்பட வேண்டிய இடங்கள் குறித்தும் பயிற்சியில் எடுத்து கூறினர். திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரியும் திட்ட செயலாக்க அலகு அதிகாரிகள் மகேந்திரன், தர்மலிங்கம் ஆகியோர் பயிற்சியை நடத்தினார்கள்.