ஈரோடு நந்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா 30.08.2023 நேற்று நடைபெற்றது. விழாவுக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் தலைமை வகித்தார். இவ்விழாவில் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் உறுப்பினர் பானுமதி சண்முகன் பங்கேற்று குத்துவிளக்கேற்றினார். சிறப்பு அழைப்பாளராக மாணவர்களின் தனித்திறன்களை ஊக்கப்படுத்தும் பிரபல பேச்சாளரான முனைவர் ஜெயந்தி ஸ்ரீ பாலகிருஷ்ணன் பங்கேற்று பேசியதாவது:
"கல்லூரி வாழ்க்கைக்கு மரங்களை சிறந்த உதராணமாக கூறலாம். ஏனென்றால், மரங்களில் பூ வைக்கும், காய் பிடிக்கும், பழங்கள் தரும். ஆனால், பருவம் முடிந்ததும் இலைகள் உதிர்ந்து மரம் காய்ந்து போகும். பின்னர், அடுத்த பருவத்திற்கு மீண்டும் இலைகள் துளிர்விட்டு, காய், பழங்களை தரும். சில நேரங்களில் நாம் பார்த்து உறுதியாக நினைத்த மரத்தின் கிளைகள் கூட புயல், மழை காற்றால் முறிந்து விடும். கல்லூரி வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் நட்புகள் இலை, காய், கனிகளை போன்றது தான். நட்புக்காக தங்களது வாழ்க்கையை முடிவு செய்யாதீர்கள். அவை நம் வாழ்க்கையில் இறுதி வரை வரப்போவதில்லை. மரத்தின் வேர்களாக பெற்றோர், ஆசிரியர்கள் தான் இறுதி வரை இருப்பார்கள். கல்லூரிக்கு எதற்கு வந்துள்ளோம், படிப்பதற்காக. அதனை மறந்து விடாதீர்கள். அடிக்கடி சொல்லி கொள்ளுங்கள் படிப்பதற்காக வந்துள்ளோம் என்று"
இவ்வாறு ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலாளர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி முனைவர் ஆறுமுகம், நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் இயக்குநர் செந்தில் ஜெயவேல், நிர்வாக அலுவலர் வேலுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில், நந்தா தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் நந்தகோபால் நன்றியுரை ஆற்றினார்.