Type Here to Get Search Results !

மாவட்ட தொழில் மையம் மூலம் மானியத்துடன் கடன் வசதி பெறலாம் - ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா அறிவிப்பு...

ஈரோடு மாவட்டத்தில்,  மாவட்ட தொழில் மையம் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என 11.09.2023 நேற்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில்,
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின்கீழ் திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை கடனுதவியும், திட்ட முதலீட்டில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். குறைந்தபட்ச கல்வித்தகுதி பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் வயது வரம்பு 55க்குள் இருக்க வேண்டும். சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்கள் துவங்கலாம்.
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் பட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்காக 35 சதவீதம் மானியம் மற்றும் 6 சதவீதம் வட்டி மானியத்துடன் இணைந்த கடன் உதவி திட்டமாகும். புதிய தொழில் துவங்குதல் மற்றும் தொழில் விரிவாக்கத்திற்காக அதிகபட்ச மானியம் ரூ.1.50 கோடி வரை பெறலாம். இத்திட்டத்தின் கீழ் வியாபாரம், குறைந்தபட்ச வயது வரம்பு 18ம் உச்ச பட்ச வயது வரம்பு 55க்குள் இருத்தல் வேண்டும். சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள் துவங்கலாம்.
பாரத பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டத்தின்கீழ் புதிய உணவு சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்கனவே செயல்படும் உணவு மதிப்பு கூட்டுதல் தொழில் நிறுவனங்கள் மேம்படுத்தவும் கடனுதவி வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச வயது வரம்பு 18 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை. கடனுதவி அதிகபட்சம் ஒரு கோடி வரையும் திட்ட முதலீட்டில் 35 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சம் ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள் துவங்கலாம். உற்பத்தி சார்ந்த தொழிலுக்கு திட்ட மதிப்பீடு ரூ.50 லட்சம் வரையும் சேவை சார்ந்த தொழிலுக்கு திட்ட மதிப்பீடு ரூ.20 லட்சம் வரையும் கடன் உதவி வழங்கப்படும். கடனுதவிக்கான மானியம் நகர்ப்புறங்களில் 25 சதவீதம் ஊரக மற்றும் கிராமப்பகுதிகளில் 35 சதவீதம் வழங்கப்படும்.

படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் படித்த வேலையற்ற இளைஞர்கள் வியாபாரம், வணிகம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.15 லட்சம் வரை கடனுதவியும் திட்ட முதலீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை மானியமாக பெறலாம். வயது வரம்பு பொதுப் பிரிவினர்க்கு 45 வயது வரை மற்றும் சிறப்பு பிரிவினருக்கு 55 வயது வரை அனுமதிக்கப்படுகிறது. கல்வித்தகுதி குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, ஈரோடு மாவட்ட தொழில் மைய  அலுவலகத்தை அணுகி அல்லது தொலைபேசி எண் 0424- 2275283 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன் பெறலாம் 
என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.