ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலை சார்பில், 12.09.2023 செவ்வாய்க்கிழமையன்று ஆலையில் உள்ள கலையரங்கத்தில் அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
விழாவின் தொடக்க நிகழ்வாக காங்கேயம் தமிழர் பாரம்பரிய கலைக்குழுவினரின் கம்பத்தாட்டம் நடைபெற்றது.
பின்னர், அருட்செல்வரின் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, ஆனந்த் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
திருவண்ணாமலை ஆதினம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவர் பாலசுப்ரமணியம் அவர்கள் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். இதனையடுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ கருப்பையா அவர்கள் அருட்செல்வரின் அரசியல் பன்முகத்திறனைப் பற்றியும், பர்வீன் சுல்தானா அவர்கள் அருட்செல்வரின் சமூக மேம்பாட்டைப் பற்றியும், இராமலிங்கம் வழக்குரைஞர் மற்றும் சென்னிமலை, கள்ளிப்பட்டி கரும்பு விவசாயி அருள்நிறை அருட்செல்வர் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினர். இதனைத்தொடர்ந்து சக்தி குழுமத்தின் தலைவர் மாணிக்கம் ஏற்புரை ஆற்றினார்.
மேலும், சக்தி சர்க்கரை ஆலை ஆப்பக்கூடல், சிவகங்கை, மொடக்குறிச்சி ஆலைகளின் கரும்பு விவசாய பெருமக்கள், அலுவலர்கள் தொழிலாளர்கள் சார்பாக சக்தி குழுமத்தின் தலைவர் மாணிக்கம், நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணியம், சாமுண்டீஸ்வரி நிர்வாக இயக்குனர் சீனிவாசன் ஆகியோருக்கு அருட்செல்வரின் நூற்றாண்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது. விவசாய பெருமக்கள் ஆலையின் இயக்குனர்கள், கோவை தலைமை அலுவலக அதிகாரிகள் முன்னாள் தொழிற்சங்க பிரதிநிதிகள், உள்ளூர் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் சார்பாக பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இவ்விழாவின், முடிவில் ஆலையின் உப தலைவர் திருவேங்கடம் நன்றியுரை ஆற்றினார்.