கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் திரு. டாக்டர். எம். இளங்கோவன் அவர்களின் உத்திரவிற்கிணங்க கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரில் உள்ள 30 வார்டுகளிலும் இருந்த பயனற்ற டயர்கள் அனைத்தும் இன்று சிறப்பு பணியாக சேகரிக்கப்பட்டு நகராட்சியின் வளமீட்பு மையத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்கள் அனைவரும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது வீடுகளில் தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களில் கொசு புகா வண்ணம் நன்கு மூடி வைக்க வேண்டும்.
தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், வாகன டயர்கள், தேங்காய் தொட்டிகள், குளிர்சாதனப் பெட்டி, பயன்படுத்தாத சிமெண்ட் தொட்டிகள், உடைந்த மண் பானைகள் போன்றவற்றில் தண்ணீர் தேங்கி நிற்கா வண்ணம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். நகராட்சிப் பணியாளர்கள் ஆய்வு செய்யும் போது கொசு புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் இருப்பின் சம்பந்தப்பட்ட வீட்டு மற்றும் வணிக உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்ற தலைவர் திரு. N.R.நாகராஜ் அவர்களும், நகராட்சி ஆணையாளர் திருமதி T.சசிகலா அவர்களும் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்கள்.