விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத ரசாயனம் கலக்காத களிமண்ணில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்த பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாளர் சங்க ஈரோடு மாவட்ட தலைவர் கனகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:
இந்துக்கள் ஆண்டுதோறும் ஆவணி மாதம் மிகச் சிறப்பாக கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இயற்கையான களிமண்ணில் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வடிவமைத்து வண்ணம் தீட்டி பூஜைக்கு பின் ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைப்பர். தற்போது பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் சிலைகளை வடிவமைக்கின்றனர். இதில் ஜிப்சம், சல்பர், பாஸ்பரஸ், மெக்னீசியம் உள்ளிட்ட பல்வேறு ரசாயனங்கள் கலக்கப்படுகிறது. அலங்கரிக்க பிளாஸ்டிக் தெர்மாகோல் பயன்படுத்தப்படுகிறது. இவை மக்கும் தன்மை கொண்டவை அல்ல.
இவ்வாறு தயாரிக்கப்படும் சிலைகளை ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் கரைப்பதால் மாசு ஏற்படுகிறது. நோய் தொற்று ஏற்படுகிறது. ஈரோடு மற்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் மற்றும் பிற கடவுள் சிலைகள் தயாரித்து விற்கப்படுகிறது. சிலைகளை தயாரிப்பதில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாசு ஏற்படுத்தாத இயற்கை களிமண்ணை பயன்படுத்தும் தயாரிப்பாளர்கள், கைவினைஞர்களுக்கு மட்டுமே உரிமம் வழங்க வேண்டும் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் அதுவும் ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் அரசு விதிகளின்படி மாசு ஏற்படுத்தாத ரசாயனங்கள் இல்லாத களிமண்ணில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு மண்பாண்ட குலாளர் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாசு ஏற்படுத்தாத விநாயகர் சிலைகளை பயன்படுத்துவதால் நீர்நிலைகள் பாதுகாக்கப்படும். மாசு ஏற்படுத்தாத விநாயகர் சிலைகளை மக்கள் பயன்படுத்துவதை அரசு அதிகாரிகள் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.