இதன் அடுத்த கட்டமாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் பத்து ரூபாய் சேவை கட்டணத்தில் ஆற்றல் மருத்துவமனை மற்றும் ஆற்றல் உணவகம் திறப்பு விழா நடைபெற்றது .
ஆற்றல் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஆற்றல் அசோக்குமார் முன்னிலையில் உலக அமைதி தூதுவர் குரு மகான் அவர்கள் ஆற்றல் உணவகத்தை திறந்து வைத்தார்.
இதில் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்கள், வர்த்தக பிரமுகர்கள் மற்றும் ஆன்மீகப் பெரியோர்கள் திரளாக பங்கேற்றனர்.
ஆற்றல் உணவகம், தாராபுரம் தாலுகா அலுவலகம் மேற்கு கச்சேரி வீதியிலுள்ள சுரேஷ் காம்ப்ளக்ஸில் பத்து ரூபாய் கட்டணத்தில் விரும்பியவர்களுக்கு காலை இட்லி, சட்னி, சாம்பார் தரமாக தயாரித்து பரிமாறப்பட உள்ளது. விரும்பிய அளவு மக்கள் சாப்பிடலாம். இதே போல் மதியம் சாப்பாடு, சாம்பார், மோர், பொரியல் மற்றும் ஊறுகாய் பத்து ரூபாய் கட்டணத்திலும் இரவு இட்லி, சட்டினி, சாம்பார் ஆகியவை பரிமாறப்பட உள்ளது.
மேலும், ஆற்றல் மருத்துவமனை தாராபுரம் வடக்கு தெரு புனித செபஸ்தியார் ஆலயம் அருகில் ரூபாய் 10 சேவை கட்டணத்தில் காய்ச்சல், இருமல், சளி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் , தொண்டை வலி உள்ளிட்ட 19 வகையான நோய்களுக்கு மருத்துவ பரிசோதனை தகுதிமிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கொண்டு மருத்துவ சேவை வழங்கப்பட உள்ளது.
சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் தாராபுரம் பகுதியில் பொதுமக்களுக்காக இன்று ஒரே நாளில் ஆற்றல் உணவகம் மற்றும் ஆற்றல் மருத்துவமனை தொடங்குவதில் பெரு மகிழ்ச்சி கொள்வதாகவும் மேலும் அடுத்த மாதம் காங்கேயம் பகுதியில் ஆற்றல் உணவகம் திறக்கப்படும் என்றும் ஆற்றல் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் திரு. ஆற்றல் அசோக்குமார் தெரிவித்தார்.