கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த புயல் மழையினால் பேரழிவை சந்தித்த தூத்துக்குடி மாவட்டத்தில் சாலையிலும், குடியிருப்புகளிளும் வெள்ளம் சூழ்ந்து குளங்களாக மாறியுள்ளன. பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி தனி தீவுகளாக காட்சியளித்தது. மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் முகாமிட்டு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு வீடாக சென்று நிவாரண உதவிகளையும், மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு விரைவாக திரும்ப தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்கள்.
வெள்ள நீர் வடிந்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிய நிலையிலும், வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் குறையவில்லை. உணவு, உடை. ஏன் அடுப்பைக் கூட பற்ற வைக்க விடாமல் புயல் மழை தூத்துக்குடி மக்களின் இயல்பு வாழ்வை சூறையாடி சென்று விட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாட்டின் பிறப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சேவை உணர்வுடன் தங்களால் இயன்ற உதவிகளை அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம், ஈரோடு சட்டக் கல்லூரியில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1,00,000 சப்பாத்திகள் தயாரித்து வழங்க கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவ மாணவிகளால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் திரு. சிந்து ரவிச்சந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரியின் செயலாளர் திருமதி. மீனாட்சி, இணைச்செயலாளர் திரு. அருண் பாலாஜி, தலைவர் திரு. கிஷோர், துணைத் தலைவர் திருமதி. காயத்ரி, இணைச்செயலாளர் திருமதி. சாருரூபா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் திரு. கஜேந்திரராஜ் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாணவ மாணவிகள் இரவு பகலாக சப்பாத்திகள் தயார் செய்து பொட்டலங்கள் கட்டும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், கோபிசெட்டிபாளையம் கலிங்கியம் தங்கமலை கரட்டை சேர்ந்த இளைஞர்கள் அப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு கிராமத்து பசங்க என்னும் இயக்கத்தை நடத்தி வருகின்றனர். இயக்கத்தை சேர்ந்த ஜீவானந்தம், ஜோதி, குணசேகர், கௌதம், தரணிதரன், இளங்கோ, மோகன், தினேஷ், கோகுல், குமார், சுந்தர், லோகேஷ் குமார், கதிர்ச்செல்வன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் தன்னார்வலர்களாக கலந்து கொண்டு சப்பாத்தி, தக்காளி தொக்கு பொட்டலம் கட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து வாகனங்கள் மூலம் சப்பாத்தி பொட்டலங்கள், பால் பழங்கள், மற்றும் வெள்ள நிவாரண பொருட்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.